புதுச்சேரி, வில்லியனுாரை அடுத்த கொம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் கணேசன் – அழகுமீனா தம்பதியினர். கணேசன் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த நிலையில், அவரின் மனைவி அழகுமீனா சின்னவாய்க்கால் தெருவில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் அழகு கலை நிபுணராக வேலை செய்து வந்தார். ஆனால் அந்த வேலை ஏனோ கணேசனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அந்த வேலைக்குப் போகக் கூடாது என்று அழகுமீனாவிடம் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார் கணேசன். இந்த விவகாரத்தில் இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் பியூட்டி பார்லர் வேலைக்கு சென்று வந்துகொண்டிருந்தார் அழகுமீனா.
இந்நிலையில்தான் நேற்று மதியம் சுமார் 1.30 மணிக்கு அழகுமீனா வேலை பார்க்கும் பியூட்டி பார்லருக்குச் சென்ற கணேசன், “உன்னை இந்த வேலைக்கு போகாதன்னு சொன்னா கேக்க மாட்டியா? எதுக்காக நீ பியூட்டி பார்லர்ல வேலை செய்ற? இந்த வேலையை விட்டுடு. நீ இந்த வேலையை செய்றது எனக்கு அசிங்கமா இருக்குது” என்று அழகுமீனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அழகுமீனாவை தாக்கினார் கணேசன். அதில் நிலைதடுமாறிய அழகுமீனாவின் முகத்தில் தான் மறைத்து வைத்திருந்த சிறிய பிளாஸ்டில் பாட்டிலில் இருந்த பெட்ரோலை ஊற்றினார்.
என்ன நடக்கிறது என்று அழகுமீனா சுதாரிப்பதற்குள், தான் வைத்திருந்த சிகரெட் லைட்டரால் அவர் முகத்தில் தீ வைத்தார். அதில் குபீரென்று அவரது முகம் பற்றி எரிய, வலியால் அலறித் துடித்தார் அழகுமீனா. அந்த அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பியூட்டி பார்லர் ஊழியர்கள் அழகுமீனா முகத்தில் எரிந்த தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்து தப்பித்துச் சென்றார் கணேசன். அதையடுத்து ஆம்புலன்சை வரவழைத்த பியூட்டி பார்லர் ஊழியர்கள், அழகுமீனாவை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 30% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து அங்கு விரைந்த ஒதியன்சாலை காவல்துறையினர் அழகுமீனாவிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில், கணேசனை தனிப்படை அமைத்து தேடினர்.
நேற்று மாலை 7 மணியளவில் தவளக்குப்பம் பகுதியில் பதுங்கியிருந்த கணேசனை காவல்துறையினர் கைது செய்தனர். அதையடுத்து அவரின் கைகளில் இருந்த தீக்காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபிறகு அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, “நான் எத்தனையோ தடவை அந்த வேலைக்கு போகாதன்னு சொல்லியும் அவ கேட்கல. மேக்கப் போட்டுக்கிட்டு அவ வேலைக்கு போறது எனக்கு புடிக்கல. அதனாலதான் அவ முகத்துல பெட்ரோல் ஊற்றி கொளுத்தினேன்” என்று கூறினாராம் கணேசன். இந்நிலையில் பெட்ரோல் பாட்டிலுடன் கணேசன் பியூட்டி பார்லருக்குள் வரும் வீடியோ காட்சியும், தீக்காயங்களுடன் அழகுமீனாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ காட்சியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.