திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கூடல் பகுதியை சேர்ந்த 17 வயதான பிளஸ் 2 மாணவி ஒருவர் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தார்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோரை அழைத்த பள்ளி நிர்வாகம் அவரை கவுன்சிலிங் அழைத்து செல்லுமாறு சிபாரிசு செய்தனர்.
அதன்படி மாணவியின் பெற்றோர் அப்பகுதியில் உள்ள பாதிரியார் பான்ட்சன் ஜான் (வயது 35) என்பவரிடம் உளவியல் ஆலோசனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பாதிரியார் பான்ட்சன் ஜான், மாணவிக்கு கவுன்சிலிங் அளித்தார். மறுநாளும் அந்த மாணவியை கவுன்சிலிங் வருமாறு பாதிரியார் கூறியிருந்தார்.
மறுநாள் அந்த மாணவி, கவுன்சிலிங்குக்கு செல்லவில்லை. இதனால் பாதிரியார் பான்ட்சன் ஜான், மாணவியின் வீட்டுக்கே சென்றார். மாணவியை தனி அறைக்கு அழைத்து சென்று கவுன்சிலிங் வழங்கினார்.
கவுன்சிலிங் முடிந்து பாதிரியார் சென்றதும், மாணவி, அறையில் இருந்து அழுதபடி வெளியே வந்தார். பின்னர் தனது நெருங்கிய தோழி ஒருவரை சந்தித்து பாதிரியார் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறினார். இதனை கேட்ட தோழி, அதிர்ச்சி அடைந்தார். அவர் இதுபற்றி பள்ளி ஆசிரியைகளிடம் தெரிவித்தார்.
அவர்கள் உடனே குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதில் கவுன்சிலிங்குக்கு சென்ற மாணவியை பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், போலீசில் புகார் செய்தனர். போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி பாதிரியார் பான்ட்சன் ஜானை கைது செய்தனர்.