பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது முதல் இந்திய அரசும், கணிசமான இந்திய மக்களும் புடினின் ரஷ்யாவை ஆதரிக்கின்றனர். டவிட்டரில் #IStandWithPutin #istandwithrussia போன்ற ஹேஷ்டேக்குள் இந்தியாவில் பிரபலமாகின.
தள்ளுபடி விலையில் ரஷியாவின் கச்சா எண்ணெய்
முக்கியமாக ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து ஐ.நா. தீர்மானம் வந்த போதெல்லாம் இந்தியா அதை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்திருக்கிறது. வெகு சமீபத்தில் ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை விற்பதற்கு முன்வந்ததையும் இந்தியா மகிழ்ச்சியுடன் ஏற்றிருக்கிறது. இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு வெறும் 3% என்றாலும் கடந்த ஒரு வருடத்தில் பெட்ரோல் – டீசல் விலை கணிசமாக ஏறியிருக்கிறது. இந்நிலையில் மாஸ்கோ அறிவித்த தள்ளுபடி விலையை இந்தியா மனமுவந்து ஏற்றிருக்கிறது.
ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளிடமிருந்து சமையல் எண்ணையையும் இந்தியா கணிசமாக இறக்குமதி செய்கிறது. போரினால் அவற்றின் விலை உயரவும் வாய்ப்பிருக்கிறது. கச்சா எண்ணெய் போல சமையல் எண்ணெய்க்கும் தள்ளுபடி தர இயலாது. அதன் வர்த்தக மதிப்பு குறைவு. ஒருவேளை அதற்கும் ரஷ்யா முன்வந்தால் ஏற்பதற்கு
மோடி
அரசிற்கு எந்த தடையும் இல்லை.
நேருவைப் பின்பற்றும் மோடி அரசு
மோடியோ, பாஜகவின் டிவி நிலைய வித்வான்களோ அனைவரும் இந்தியாவின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் காங்கிரஸ் கட்சி என்று நேருவின் காலத்திலிருந்து ஆரம்பிப்பார்கள். ஆனால் உக்ரைன் மீதான போருக்கு அவர்கள் நேருவையோ இந்திரா காந்தியையோ இழுக்க முடியாது. ஏனெனில் அவர்களின் கொள்கைப்படியே இன்று மோடி அரசு ரஷ்யாவை ஆதரிக்கிறது. அந்தக் கொள்கையின் செல்வாக்கு இன்றும் தொடர்வதால் மோடி அரசுக்கு வேறு வழியில்லை.
ரஷ்யா தரும் கச்சா எண்ணெயைத் தள்ளுபடி விலையில் வாங்குவதற்கு முன்பு இந்தியா ஒரு கணம் யோசிக்க வேண்டும், வரலாற்றில் எப்படி இடம் பெறுவோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று அமெரிக்கா உருகியிருக்கிறது. வியட்நாம் போர், ஈராக்- ஆப்கானிஸ்தான் போரெல்லாம் வரலாற்றில் வராது போலும். இருக்கட்டும். இப்படி அமெரிக்காவைப் பகைத்துக் கொண்டு ரஷ்யாவை இந்தியா ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன?
1947முதல் உருவான சோவியத் – இந்திய நட்பு
வேறு வழியின்றி இதற்கு நாம் நேரு காலத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். 1947 விடுதலை பெற்ற முதலே அப்போதிருந்த சோவியத் யூனியன் இந்தியாவின் முக்கியமான கூட்டாளியாகத் திகழ்ந்தது. அப்போது சீனா, அமெரிக்கா இரண்டின் ஆதிக்கத்தையும் ஆசியாவில் எதிர்ப்பதற்கு இந்தியாவின் தயவு சோவியத் யூனியனுக்கு தேவையாக இருந்தது.
கோப்புப்படம்
1961ஆம் ஆண்டில் இந்தியா தனது இராணுவத்தை வைத்து போர்த்துகீசிய காலனியாக இருந்த கோவா, டாமன், டையூவைக் கைப்பற்றியது. இதை எதிர்த்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் கண்டனத் தீர்மானம் போட்டு இந்தியா படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று முன்வைத்த போது சோவியத் யூனியன் எதிர்த்தது. 1971ஆம் ஆண்டில் இந்தியாவும் சோவியத் யூனியனும் “அமைதி, நட்பு மற்றும் ஒத்துழைப்பு” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவை ஆதரிக்கும் ரஷ்யா
காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க சர்வதேச தலையீடு வேண்டுமென ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானங்கள் வந்த போது 1957, 1962, 1971 ஆண்டுகளில் தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது சோவியத் யூனியன். இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளும் பேசித் தீர்க்க வேண்டும் என்பதே அதன் நிலை. 1978 ஆம் ஆண்டு ஜனதா அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த வாஜ்பாயி, “சோவியத் யூனியனை மட்டும்தான் எங்கள் நாடு நம்பத்குந்த ஒரே நண்பனாக பார்க்கிறது” என்று கூறினார்.
ஃபேஸ்புக்கும் பாஜகவின் பினாமி விளம்பர உலகமும்!
2000ஆம் ஆண்டில் ரஷ்யாவின் அதிபர் புடினும், அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் இரு நாடுகளின் நெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 2019ஆம் ஆண்டில் ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370ஆவது பிரிவை மோடி அரசு நீக்கியபோது, சர்வதேச அரங்கில் கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டது. அப்போதும் ரஷ்யா இது இந்தியாவின் உள்விவகாரம் என்று கூறியது.
கோப்புப்படம்
2020ஆம் ஆண்டில் காஷ்மீரில் சர்வதேசத் தலையீடு வேண்டுமென சீனா முன்னெடுத்தபோது ரஷ்யா மறுத்துவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளும்தான் பேசித் தீர்க்க வேண்டுமென மீண்டும் கூறியது. அப்போது பலநாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும், தூதர்களும் காஷ்மீரில் பயணம் செய்ய திட்டமிட்டபோது ரஷிய தூதர் மறுத்துவிட்டார்.
ரஷ்ய ஆக்கிரமிப்புகளை ஆதரிக்கும் இந்தியா
இவையெல்லாம் சோவியத் யூனியனும், ரஷ்யாவும் இந்தியாவுக்கு செய்த உதவிகள் என்றால் பதிலுக்கு இந்தியாவும் அதே போன்று நிறைய செய்திருக்கிறது. 1956இல் ஹங்கேரியில் நடந்த புரட்சியை சோவியத் யூனியன் வன்முறையால் அடக்க முயன்றபோது இந்தியா பொதுவெளியில் அதைக் கண்டிக்கவில்லை. அதே போன்று 1968இல் சோவியத் படைகள் செக்கோஸ்லோவாகியா மீது படையெடுத்த போதும் இந்தியா அமைதி காத்தது.
1979இல் சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போது பிரதமராக இருந்த சரண்சிங் அதைக் கடுமையாகக் கண்டித்தாலும், சோவியத்துக்கு ஆதரவாக இந்தியா ஐ.நா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது. 2000ஆம் ஆண்டுகளில் செஷன்யாவில் ரஷ்ய இராணுவம் நடத்திய வன்முறையை எதிர்த்து ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தபோது இந்தியா எதிர்த்து வாக்களித்து. அதே போன்று சிரியா பிரச்சினையிலும் ரஷ்யாவிற்கு ஆதரவாக 2013, 2014ஆம் ஆண்டுகளில் வந்த ஐ.நா.தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது.
2014இல் ரஷ்யா, கிரிமியாவை ஆக்கிரமித்தபோது ஐ.நா.பொதுச்சபை கொண்டு வந்த தீர்மானத்திறகு எதிராக ரஷியாவிற்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பை புறக்கணித்தது. இதே பிரச்சினைக்காக 2020இல் உக்ரைன் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து ஐ.நா.பொதுச்சபையில் இந்தியா வாக்களித்தது.
இந்தியா- ரஷியா கலாச்சார உறவு
அரசியல் அரங்கில் மட்டுமல்ல பொருளாதார,இராணுவ ரீதியாகவும் இந்த நட்பு நீடிக்கிறது. சோவியத் யூனியன் வீழ்வதற்கு முன்பு இந்தியா மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருந்தது. இந்தியாவின் பல பொதுத்துறைகள் சோவியத் யூனியனது ஆதரவுடன் உருவாக்கப்பட்டன. விண்வெளிக்குப் பறந்த முதல் இந்தியரான ராகேஷ் சர்மாகூட சோவியத் விண்வெளித் திட்டத்தின் மூலம்தான் அதைச் சாதித்தார்.
மரணப் படுக்கையில் காங்கிரஸ்!
கலாச்சார அரங்கிலும் இரு நாடுகள் நெருக்கமாக இருந்தன. சோவியத் யூனியனின் அரசியல், இலக்கியம், அறிவியல் மற்றும் குழந்தைகள் புத்தகங்கள் அனைத்தும் இந்தியாவில் பிரபலம். அதேபோன்று ரஷ்ய மக்கள் இந்திப் படங்களையும் ரசித்தார்கள்.
ரஷியாவின் இராணுவத் தளவாடங்கள்
இவற்றையெல்லாம்விட முக்கியமானது இந்தியா தனது இராணுவத் தேவைக்காகப் பெருமளவு ரஷியாவையே சார்ந்திருக்கிறது. சோவியத் காலத்திலிருந்தே விமானந்தாக்கி கப்பல்கள், டேங்குகள், துப்பாக்கிகள், சண்டை விமானங்கள், ஏவுகணைகள் என்று ஏராளமான தளவாடங்களை இந்தியா வாங்கியிருக்கிறது. 1980களில் இந்திய கடற்படை நவீனமாக்கியதில் சோவியத் யூனியனுக்குப் பெரும் பங்குண்டு. அணுசக்தியில் இயங்கும் சோவியத் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை வாடகை கொடுத்து இந்தியா பயன்படுத்தியது.
கோப்புப்படம்
இன்றும் இந்தியாவின் இராணுவத் தளவாடங்களில் 60 முதல் 85% ரஷியாவோடு தொடர்புடையவை. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி 2016 – 2020 ஆண்டுகளில் இந்தியாவுக்கு இராணுவ தளவாட ஏற்றுமதி செய்த நாடுகளில் இரண்டாவது பெரிய நாடாக ரஷியா இருந்தது. 2011-2015 இல் இராணுவ தளவாட இறக்குமதியில் 53% ஆக இருந்த ரஷியாவின் பங்கு 2020 இல்23% ஆக குறைந்திருக்கிறது. ஆயினும் நவீன வான் பாதுகாப்பு அமைப்பு, நீர்மூழ்கிக் கப்பல்கள், அணுசக்தியில் இயங்குவதோடு ஏவுகணைகளை வீசும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கு இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வலதுசாரி அதிபர்களை ஆதரிக்கும் மோடி
புடினைப் போல மோடியும் சர்வாதிகாரத்தை விரும்புவராக இருக்கிறார். உலக அளவில் அறியப்பட்ட வலதுசாரி ஆட்சியாளர்களான அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகு, பிரேசிலின் பொல்சோனாரோ போன்றவர்களோடு மோடி நட்பு பாராட்டியிருக்கிறார். இந்தியாவிலும் விருந்து கொடுத்து உபசரித்திருக்கிறார்.
இருப்பினும் உக்ரைன் போரில் ரஷியா வெற்றி பெற்று திரும்பாமால் போனால் நெருக்கடி முற்றும். அப்போது அமெரிக்கா அதிக அழுத்தம் கொடுக்கும். தற்போதே அமெரிக்காவுடன் நெருக்கம் பாராட்டி வரும இந்திய அரசு ரஷியாவைக் கைவிடுமா விடாதா என்பதை அறுதியிட்டு கூற முடியாது. ஏனெனில் இராணுவரீதியாக ரஷியாவை சார்ந்திருக்கும் போது அரசியல் ரீதியாக அமெரிக்காவை மட்டும் ஆதரிப்பது கடினம்.
அமெரிக்கா, ரஷியா இருநாடுகளும் இந்தியாவிற்கு வேண்டும். அதில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என இந்தியா நடந்துகொள்வது கடினம். எனினும் இப்போதைக்கு நேரு காலம் தொட்டு அமலில் இருக்கும் ரசியக் கொள்கையைத்தான் மோடி அரசும் பின்பற்றிவருகிறது என்பதுதான் உண்மை.