சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபைக் கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெற்றது.
பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால் முன்னதாகவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்கு வந்து அமர்ந்து இருந்தனர்.
சரியாக 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு சட்டசபைக்குள் வந்ததும் சபை தொடங்கியது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பட்ஜெட் தாக்கல் செய்யும்படி சபாநாயகர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார்.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”- என்றார் மகாகவி.
ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், திருமண உதவிக்காகவும் முத்தமிழறிஞர் கலைஞரால் 1989-ம் ஆண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் தொடங்கப்பட்டது.
மாறி வரும் காலச்சூழலுக்கு ஏற்ப, பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்ய இத்திட்டத்தை மாற்றி அமைப்பது அவசியமாகிறது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம்” “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்” என மாற்றி அமைக்கப்படுகிறது.
இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிபு, தொழிற் படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்கள் வங்கி கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.
இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இத்திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்பு உள்ளது.
இந்தப் புதிய முன் முயற்சிக்காக வரவு- செலவுத் திட்டத்தில் ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.27 கோடியில் “சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம்”அமைக்கப்படும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு ரூ.2,542 கோடியும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்திற்கு ரூ.1,949 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு ரூ.5,922.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர்களை, படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதே முதல்- அமைச்சரின் கனவுத் திட்டமான “நான் முதல்வன்” திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவ-மாணவிகளின் தனித்திறமைகள் அடையாளம் காணப்பட்டு, அவை ஊக்குவிக்கப்படும்.
மேலும் தொழில் நிறுவனங்களின் திறன் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் வேலை பெறும் திறன் பெருகும். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்.
தமிழ்நாட்டில் உள்ள திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி, ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது இந்த அரசின் தொலைநோக்குப் பார்வையாகும். உலகளாவிய பங்களிப்புடன்,“அறிவு சார் நகரம்” ஒன்று உருவாக்கப்படும்.
இந்த அறிவு சார் நகரம், உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகளைக் கொண்டிருக்கும். இந்நகரம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், திறன் பயிற்சி மையங்கள், அறிவு சார்ந்த தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும்.
தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்துகொண்டே வருகிறது. அதற்கேற்ப, அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி, புதிய வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகங்கள், திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும். இதற்காக, இவ்வாண்டு 250 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்காக 204 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில் உயர் கல்வித்துறைக்கு 5,668.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரால் தொடங்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு 30 கோடி ரூபாய் நிதியாக வழங்கப்படும்.
விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு இந்த ஆண்டு 20.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் நிதியாண்டில் மேலும் 1000 புதிய வீடுகள் பண்டைய பழங்குடியினருக்கு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.
ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 4,281.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.