புனித் ராஜ்குமாரின் கடைசி படம்: கண்ணீர் மல்க ஜேம்சை கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது 47வது வயதில் திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தென்னிந்திய சினிமாவையே அதிர்ச்சி அடைய வைத்த மரணம். புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம் ஜேம்ஸ். இதில் அவர் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். புனித்தின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான பிரமாண்ட ஆக்ஷன் படம் இது.
இந்த படத்தை முதலில் கன்னடத்தில் மட்டுமே வெளியிட தீர்மானித்திருந்தார்கள். புனித் ராஜ்குமாரின் மரணத்திற்கு பிறகு இதனை பான் இந்தியா படமாக மாற்றினார்கள். கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான நேற்று வெளியானது.
கன்னட ரசிகர்கள் அலைஅலையாக நேற்று தியேட்டர்கள் முன் குவிந்தனர். பெங்களூரு, மைசூரு தியேட்டர்களில் பேண்டு வாத்தியங்கள் முழுங்க படத்திற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. ராஜ்குமாரின் கட்அவுட்டுக்கு தீபாரதணை காட்டி, பாலாபிஷேகம் செய்தார்கள். இந்த கொண்டாட்டங்களை ரசிகர்கள் கண்ணீர் மல்க கொண்டாடி தீர்த்தார்கள்.
படம் பார்த்து வெளியில் வந்த மக்கள் கண்ணீருடன் காணப்பட்டார்கள். படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் புனித் ராஜ்குமாரின் படம் மாலை அணிவித்து வைக்கப்பட்டிருந்தது. அதனை வணங்கிய பிறகே ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றார்கள்.
இதற்கிடையில் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள வீடியோவில் “அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து விட்டு புனித் சென்று விட்டார், அவர் தனது நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறார். அவரது கடைசி படம் மாபெரும் வெற்றி அடைய வேண்டும்”. என்று குறிப்பிட்டிருக்கிறார். மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள பதிவில் “புனித் உங்களின் ஜேம்ஸ் எங்கள் மனதில் உயர்ந்த இடத்தை பிடிக்கும். உங்களை நிறையவே மிஸ் செய்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.