மவுண்ட் மவுங்காணு,
பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மவுண்ட் மவுங்காணுவில் இன்று நடைபெற்று வரும் 17-ஆவது லீக் போட்டியில் வங்காளதேச அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷெமைன் கேம்பல் 53 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
வங்காளதேச அணி தரப்பில் சல்மா காதுன், நஹிதா அக்டர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இதை தொடர்ந்து 141 ரன்கள் இலக்குடன் வங்காளதேச அணி விளையாட தொடங்கியது.
தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷமீமா சுல்தானா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா 25 ரன்களில் வெளியேறினார். மற்ற வீராங்கனைகள் யாரும் சோபிக்காத நிலையில் அந்த அணி 49.3 ஓவர்களில் 136 ரன்கள் மட்டுமே அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.