சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை அரங்கில் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
2014ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக வருவாய்ப் பற்றாக்குறை ரூ.7,000 கோடிக்கு மேல் குறையும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தெரிவித்தார்.
வெள்ளத்தைக் குறைக்கும் நோக்கில் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு, 2022-23 ஆம் நிதியாண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத் திட்டத்துக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை தியாகராஜன் அறிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திய மாநிலம் முழுவதும் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் திட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார். ‘முதலமைச்சரின் இலவசப் பயணத் திட்டத்தால் பெண் பயணிகளின் விகிதம் 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக அதிகரித்துள்ளது’ என்று அவர் மேலும் கூறினார்.
அந்தவகையில், பெரியாரின் சிந்தனைகளை, 21 இந்திய மொழிகளில் புத்தகமாக வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து, பிடிஆர் அறிவித்தார்.
அதில்’ தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்டிடவும், பகுத்தறிவைப் பரப்பிடவும், பெண்ணடிமைத்தனத்தை ஒழித்திடவும் தம் கடைசி மூச்சு இருக்கும்வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார். அவரின் சிந்தனைகளும், எழுத்துக்களும் காலத்தை வென்று இன்றும் ஒளிர்கின்றன.
தனித்துவமிக்க அவரது எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்துச் சென்று, அவரது முற்போக்குச் சிந்தனையால் அனைவரையும் பயனடையச் செய்வது இந்த அரசின் கடமையாகும்.
இதனை நிறைவேற்றும் விதமாக, உரிய அறிஞர் குழுவின் பரிந்துரைகளின்படி, பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் பதிப்புகளாகவும் வெளியிடப்படும். இதற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“