கடந்த மாதம் 24-ம் தேதி ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தொடங்கிய போரானது நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. உக்ரைனில் நடத்திவரும் ஆக்கிரமிப்பு போரை உடனடியாக ரஷ்யா நிறுத்தவேண்டும் என்று கடந்த புதன்கிழமை சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை எதிர்த்த ரஷ்யா, “ஐ.நா நீதிமன்றத்தின் இந்த முடிவை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது” என நேற்று கூறியிருந்தது. இது ஒருபுறமிருக்க, சீனாவிடம் ரஷ்யா ராணுவ உதவியைக் கேட்டுவருவதாக அண்மையில் அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது. மேலும், சீனாவின் நடவடிக்கையை தாங்கள் கவனித்துவருவதாகவும், ரஷ்யாவுக்கு உதவும் எந்தவொரு முயற்சியும் பொருளாதாரத் தடைக்கு வழிவகுக்கும் என்றும் அமெரிக்கா எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி ஜே பிளிங்கன், “ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் போது, குழந்தைகள் உட்பட, கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீதான போரை ரஷ்யா முடிவுக்குக் கொண்டுவரும் வரை, ரஷ்யா மீதான செலவினங்களை அமெரிக்கா தொடர்ந்து அதிகரிக்கும். ரஷ்யா, சீனா தொடர்பான செய்தி குறித்து அதிபர் ஜோ பைடன் இன்று (வெள்ளிக்கிழமை) சீன ஜனாதிபதி ஜி-யை சந்திப்பார். மேலும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குச் சீனா ஆதரவளித்தால், எந்த நடவடிக்கைகளுக்கும் சீனா பொறுப்பேற்க வேண்டும் என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்தும்” என பேசியிருந்தார்.