போலந்து அழகி, உலக அழகியாக தேர்வு: அமெரிக்கா வாழ் இந்திய அழகிக்கு 2-ம் இடம்

சான் ஜுவான் :

அமெரிக்க நாட்டின் தன்னாட்சி பிரதேசமான புவேர்ட்டோ ரிக்கோவின் தலைநகரான சான் ஜுவான் நகரில் ‘மிஸ்வேர்ல்ட்’ 2021-ம் ஆண்டின் உலக அழகிப்போட்டி நேற்று முன்தினம் நடந்தது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் மானசா வாரணாசி கலந்து கொண்டார்.

இந்தப் போட்டியில் போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா (வயது 23) உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவருக்கு 2019-ம் ஆண்டின் உலக அழகி டோனி ஆன் சிங் மகுடம் சூட்டினார்.

கரோலினா பைலாவ்ஸ்கா நிர்வாகவியலில் முதுநிலை பட்டம் படித்து வருகிறார். இவர் எதிர்காலத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சிப்பட்டம் பெற விரும்புகிறார். அத்துடன் மாடல் அழகியாகவும் தொடர விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், உத்வேகம் அளிக்கிற பேச்சாளராகவும் திகழ விரும்புகிறார்.

‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகி போட்டியில் அமெரிக்கா வாழ் இந்திய அழகி ஸ்ரீசைனி இரண்டாவது இடம் (முதல் ரன்னர்-அப்) பிடித்தார். இவர் பஞ்சாப் மாநிலம், லூதியானாவை பூர்வீகமாகக் கொண்டவர்.

இவர் 5 வயதாக இருந்தபோது, குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது. இவருக்கு இதயத்தில் பிரச்சினை என 12-வயதிலேயே நிரந்தரமான பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அழகி மானசா வாரணாசி முதல் 13 இடங்களுக்குள்தான் வர முடிந்துள்ளது.

2017-ம் ஆண்டு நடந்த ‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகி போட்டியில் இந்தியாவின் நடிகை மனுஷி சில்லர் அழகி பட்டம் வென்றது நினைவுகூரத்தக்கது.

கடந்த ஆண்டு நடந்த ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப்போட்டியில் இந்தியாவின் ஹர்னாஸ் சந்து, பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.