திருப்பூர்: திருப்பூர் குன்னத்தூர் அருகே பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பிற்கு பிறகும், மகப்பேறு மருத்துவர் இல்லாமல், பிரசவம், கருக்கலைப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்த தனியார் மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட இணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குன்னத்தூர், செங்கப்பள்ளி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இன்றி பேறுகால முன் கவனிப்பு, பிரசவம், அறுவைசிகிச்சை, கருக்கலைப்பு, பேறுகால பின் கவனிப்பு ஆகியவை நடைபெறுவது தெரிய வந்தது. ஏற்கெனவே இம்மருத்துவமனையில், கடந்த 2021 டிசம்பர் ஆம் தேதி திருப்பூர் மேட்டுக்கோவில் பகுதியைச் சேர்ந்த சிலுவை பிரகாசி என்பவர் பிரசவத்தின் போது உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மார்ச் 7-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், மகப்பேறு மருத்துவர் இல்லாமல் மகப்பேறு தொடர்பான சிகிச்சைகள் ஏதும் மேற்க்கொள்ளக்கூடாது அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும் தற்போது மேற்கொண்ட ஆய்வில், தனியார் மருத்துவமனை மருத்துவர் விஸ்வநாதன், மகப்பேறு மருத்துவர் நியமிக்காமல் அவரே மகப்பேறு சிகிச்சை, கருக்கலைப்பு செய்து வருவது தெரிய வந்தது. இனியும், உரிய மருத்துவர் இல்லாமல் சிகிச்சை அளிக்கக் கூடாது. மருத்துவர் விஸ்நாதன் கல்வித் தகுதிகேற்பு பொது மருத்துவ சிகிச்சை மட்டும் வழங்க வேண்டும். அதுவரை இம்மருத்துவமனை பிரசவப் பகுதி மூடி முத்திரையிடப்படுகிறது. தவறினால் மருத்துவமனை சான்றிதழ் ரத்து செய்யப்படும்” என அறிவித்துள்ளார்.
மேலும், தனியார் மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரசவப் பிரிவுக்கு சீல் வைக்கப்பட்டது. மகப்பேறு மருத்துவர் இல்லாமல் சிகிச்சை அளித்து வந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.