பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒருவர் 80 கி.மீ. தொலைவுக்கு சைக்கிளில் சென்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
பஞ்சாபில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியை பெற்றது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் அக்கட்சி 92 இடங்களை கைப்பற்றியது. பஞ்சாபில் கடந்த 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ் மற்றும் சிரோன்மணி அகாலி தளம் இத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது.
அதேபோல, அந்த மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்து வந்த பாஜகவின் வாக்கு வங்கியும் இம்முறை கடுமையாக சரிவடைந்துள்ளது. ஊழலற்ற ஆட்சி என்ற கோஷமே ஆம் ஆத்மிக்கு இந்த தேர்தலில் பெரிய அளவில் வாக்குகளை பெற்று தந்திருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து, ஆம் ஆத்மி பஞ்சாபில் நேற்று முன் தினம் (மார்ச் 16) அதிகாரப்பூர்வமாக ஆட்சியமைத்தது. அம்மாநில முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து 92 எம்எல்ஏக்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில், நாபா தொகுதியில் வெற்றி பெற்ற குருதேவ் சிங் தேவ் மான் என்பவர் தனது தொகுதியில் இருந்து தலைநகர் சண்டிகர் வரை 80 கி.மீ. தொலைவுக்கு சைக்கிளில் சென்று எம்எல்ஏவாக பதவியேற்றார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “மக்களுடன் மக்களாக பழகுவதும், அவர்களுடைய பிரச்சினைகளையும் புரிந்து கொள்வதுமே ஒரு சட்டப்பேரவை உறுப்பினரின் தலையாய பணியாக கருதுகிறேன். அதற்கு சைக்கிள் பயணம் எனக்கு பெரிதும் உதவி செய்கிறது. அடித்தட்ட மக்களின் வாழ்விடங்களுக்கு சென்று அவர்களுடைய பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு சைக்கிளை விட சிறந்த வாகனம் எதுவும் இருக்க முடியாது. இனி நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்களுக்கு சைக்கிளிலேயே செல்லவுள்ளேன்” என்றார்.
ஒரு ரூபாய் போதும்…
தேர்தலில் தான் வெற்றி பெற்றால் மாத சம்பளம் வாங்க மாட்டேன் என்றும், அதற்கு பதிலாக ஒரு ரூபாயை மட்டுமே வாங்குவேன் என்றும் பிரசாரத்தின்போது குருதேவ் சிங் தேவ் மான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM