மக்கள் நல அரசு என்பதற்கான சான்றாக தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை இருப்பதாக வைகோ பாராட்டு தெரிவித்துளார்.
தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக அரசு கடந்த 2021 மே மாதம் பொறுப்பேற்ற பின்னர், தாக்கல் செய்த முதல் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்த புதிய திட்டங்கள், அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு, இரண்டாவது முறையாக 2022-23 ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையைவிட இரண்டாம் அலை ஐந்து மடங்கு வீரியத்துடன் பரவியபோது, திமுக அரசு போராடி கட்டுப்படுத்தியது. எதிர்பாராமல் ஏற்பட்ட செலவினங்கள், பொருளாதார நெருக்கடி மிகுந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நிதி மேலாண்மையையும் கடைபிடித்தது.
2014 ஆம் ஆண்டிலிருந்து வருவாய் பற்றாக்குறை அதிகரித்து வந்த நிலையில், திமுக அரசின் செயதிறன் மிகுந்த நிதி நிர்வாகத்தால் நடப்பு ஆண்டில் ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது என்பது பாராட்டுக்கு உரியது. மேலும் நிதிப் பற்றாக்குறை 4.61 விழுக்காடு அளவிலிருந்து 3.80 விழுக்காடாகக் குறைந்து இருப்பதும் வரவேற்கத்தக்கது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு 10 விழுக்காடு பங்களிப்பை அளித்து வருகிறது. ஆனால், ஒன்றிய அரசின் 15 ஆவது நிதிக்குழுவின் வெறும் 4.019 விழுக்காடு என நிதிப் பகிர்வு ஏமாற்றம் அளிக்கிறது.
ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்கு ஒன்றிய அரசு வழங்கும் கால வரையறை வரும் ஜூன் 30, 2022 இல் முடிவடைவதால் வரும் நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி நிதி இழப்பை தமிழ்நாடு சந்திக்க நேரிடும். எனவே ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவதை இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறைவேற்ற வேண்டும்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாக வெளியிடப்படும் என்ற அறிவிப்பு செந்தேனாய் இனிக்கிறது.
தமிழ் வளர்ச்சிக்கு முதன்மையான இடம் அளித்துள்ள திமுக அரசு, அகர முதலி திட்டத்திற்கு ரூ. 2 கோடி ஒதுக்கியிருப்பதும், தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க அரசு சாரா தனியார் பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை இலவசமாக பாடநூல், நோட்டுப் புத்தகம் போன்ற உதவிகள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கியிருப்பதும் பாராட்டுக்குரியது.
அரசுப் பள்ளி மாணவிகளின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் பெயரில் உயர்கல்வி உறுதித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து மாணவிகள் உயர் கல்வி பயிலச் செல்லும்போது, முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை ஒவ்வொரு மாதமும் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ. 1000 உதவித் தொகை வரவு வைக்கப்படும் என்ற புரட்சிகரமான இத்திட்டத்தால் மகளிர் தடையின்றி உயர் கல்வி பெற வாய்ப்பு ஏற்படும்.
வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் வழங்கப்பட்ட தங்க நகைக் கடன் தள்ளுபடிக்காக ரூ. 1000 கோடி மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடிக்கு ரூ.500 கோடி அளிக்கப்பட்டு இருப்பது, சொன்னதைச் செய்யும் திமுக அரசு என்பதற்குச் சான்றாகும்.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்த புதிதாக 13 ஆயிரம் கோடி செலவில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும், சுயஉதவிக்குழு கடன், வேளாண் கடன் வழங்க ரூ.4130 கோடி ஒதுக்கீடு, நீர்வளத்துறைக்கு ரூ. 7338.36 கோடி ஒதுக்கீடு, வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு, சென்னை வெள்ளத்தடுப்புப் பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு, தொல்லியல் ஆய்வுகள், பழங்குடிகள் அகழ்வைப்பக மேம்பாடு, பழமையான கட்டடங்களைப் புனரமைத்துப் பாதுகாக்க நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து, தேவைகளை நிறைவு செய்யும் மக்கள் நல அரசு என்பதற்குச் சான்றாக “முதல்வரின் முகவரி” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளதும், இத்துறையின் மூலம் இதுவரை 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டு இருப்பதும் திமுக அரசின் நிர்வாகச் சிறப்பை உணர்த்துகின்றன.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் இலக்குகளான வேளாண்மை உள்ளிட்ட முதன்மைத் துறைகளின் வளர்ச்சி வீதத்தை அதிகரித்தல், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு புதிய முதலீடுகளை ஈர்த்தல், மகளிர் மேம்பாடு, விளிம்பு நிலை மக்களின் சமூக, பொருளியல் முன்னேற்றம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மூலம் வறுமையை ஒழித்தல், அனைத்துத் துறைகளிலும் சமூக நீதியை நிலைநாட்டுதல், சுற்றுச் சூழலில் நீடித்த நிலைத்தத் தன்மையையும், தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவத்தையும் உறுதி செய்தல் போன்றவற்றிற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது ஆகும் என்று தெரிவித்துள்ளார்.