மதுரை : 700 ஆண்டு பழைமையான ஐயனார் சிற்பம், நடுகல் கண்டுபிடிப்பு!

தொல்லியல் அடையாளங்களின் சுரங்கமான மதுரை மாவட்டத்தில் பல தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டும், அறியப்பட்டும் வரும் சூழலில், சமீபத்தில் பழைமையான ஐயனார் சிற்பமும் நடுகல்லும் கண்டறியப்பட்டுள்ளது, வில்லூர் பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

து.முனீஸ்வரன்

வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் அனந்தகுமரன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் மதுரை மாவட்டம் வில்லூர் அருகே சித்தூரில் இப்பகுதியை மேற்பரப்புக் கள ஆய்வு செய்தபோது கண்மாய்கரையில் பாதி புதைந்த நிலையில் கி.பி 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐயனார் சிற்பத்தையும் கி.பி 16 – ம் நூற்றாண்டு கால நடுகல்லையும் கண்டறிந்தனர்.

இது குறித்து து.முனீஸ்வரன் கூறும்போது, “பாண்டியர் ஆட்சி காலத்தில் இப்பகுதி வீரநாராயண வளநாடு எல்லைக்குட்பட்ட பொற்பாத தேவி சதுர் மங்கலம் என்றும், இங்கு பழைமையான சிவன் கோயிலில் சித்தர்கள் தவம் செய்ததால் சித்தூர் என்றும் பெயர் மருவியதாகவும் சொல்லப்படுகிறது.

து.முனீஸ்வரன்

இவ்வூரின் கண்மாய் மடைப்பகுதி அருகே மூன்றடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்டு பாதி புதைந்த நிலையில் ஐயனார் சிலை ஒன்று காணப்படுகிறது. தலைப்பகுதியில் அடர்த்தியான ஜடாபாரம், இரண்டு காதுகளிலும் வட்ட வடிவ பத்ர குண்டலங்கள், கழுத்தில் கண்டிகை, சவடி, சரப்பளி அணிகலன்களுடன் மார்பில் முப்புரி நூலுடன் இச்சிற்பம் அமைந்துள்ளது. பட்டையான உதரபந்தம் மார்பையும் வயிற்றுப்பகுதியும் பிரிக்கிறது. இடுப்பில் கச்சுடன் சுகாசனக் கோலத்தில் இடது காலை பீடத்தில் அமர்த்தி, வலது காலை தொங்கவிட்டு, வலது கரத்தில் கடக முத்திரை கொண்ட செண்டாயுதம் சிதைந்த நிலையில், இடது கையைத் தனது தொடையின் மீது வைத்து அழகாகக் காட்சி தருகிறார். இதன் காலம் கி.பி 13 – ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

சங்க காலம் முதற்கொண்டு போரில் வீர மரணமடைந்த வீரனுக்கு நடுகல் வைத்து வழிபடும் முறை இருந்தது. சித்தூரில் கண்டறியப்பட்ட நடுகல்லில் வீரனின் இடுப்பில் கச்சையுடன் கூடிய குறுவாள், வலது கையில் நீண்ட கத்தியும் இடது கையில் இடுப்பில் செருகப்பட்ட வாள் பிடித்தவாறு காட்சி தருகிறார் வீரன். நீண்ட தலைப்பாகை கொண்டு காது, மார்பில் அணிகலன் அணிந்து, கை மற்றும் காலில் வளையல் அணிந்து நின்றவாறு இந்த நடுகல் வடிக்கப்பட்டுள்ளது.

து.முனீஸ்வரன்

இச்சிற்பத்தின் அமைப்பைக் கொண்டு இதன் காலம் கி.பி 16 – ம் நூற்றாண்டு சேர்ந்தவை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.