நடப்பு நிதியாண்டிற்காக தமிழக பட்ஜெட்டினை நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதில் பற்பல அறிவிப்புகள் வெளியாகின.
குறிப்பாக தொழிற்துறையினை மேம்படுத்தும் விதமாக பல அறிவிப்புகள் வெளியாகின.
குறிப்பாக பட்ஜெட்டின் ஆரம்பத்திலேயே மக்களுக்கு நோயற்ற வாழ்வு, நல்ல விளைச்சல், பொருளாதார வளம், பாதுகாப்பு, இன்ப நிலை என ஐந்தும் அவசியம் என ” பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து” என்ற குறளுடன் ஆரம்பித்தார்.
பட்ஜெட்டில் இந்த 4 துறைகளுக்கு முக்கியத்துவம்.. ஏன்..பிடிஆர் சொல்வதென்ன?
எதற்கு முன்னுரிமை
சமூக பாதுகாப்பினை வலுப்படுத்தல், வேலை வாய்ப்பினை அதிகரித்தல், கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டில் பெண்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தல், சமத்துவத்த்தினை உறுதி செய்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் இந்த பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது என பட்ஜெட் ஆரம்பத்திலேயே நிதியமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.
சென்னை வெள்ளம் தடுப்பு நடவடிக்கை
சென்னையில் வரும் வெள்ளத்தினை தடுக்க ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ள தடுப்பு பணிகளுக்கும் இந்த ஆண்டு 500 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல இத்தகைய இக்கட்டான நிலையினை கண்கானிக்க வானிலை மையங்களும், அதற்கு தேவையான கருவிகளும் வாங்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பள்ளிகல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
கொரோனா காலத்தில் முடங்கிய மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் நிறுவப்படும். ஏற்கனவே பல மாவட்டங்களில் நிறுவப்பட்ட நிலையில், மேலும் 15 மாவட்டங்களில் நிறுவப்படவுள்ளன. இதற்காக 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
அரசு பள்ளிகளை நவீனமயமாக்க, பேராசிரியர் அன்பழகம் திட்டத்தினை அரசு செயல்படுத்தவுள்ளது. இதற்காக 5 ஆண்டுகளில் 7,000 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும். நடப்பு நிதியாண்டில் முதல் கட்டமாக 1300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் பெரிதும் பயன் பெறும் வகையில் 6 மாவட்டங்களில் 36 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள் உருவாக்கப்படும்.
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு?
இதே உக்ரைன் -ரஷ்யா இடையேயான பதற்றத்தினால் தமிழகம் திரும்பிய மாணவர்களின் கல்விக்காக, தாயகம் திரும்பிய மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர, தமிழக அரசு உதவும். இதற்கான கொள்கைகளை மத்திய அரசு வகுத்து வருகிறது.
இதற்கிடையில் மருத்துவ துறைக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் 19 அரசு மருத்துவமனைகளை புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்காரச் சென்னை 2.0
சிங்கார சென்னை திட்டத்தினை விரிவாக்கம் செய்ய மாதம் 500 ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்யப்படும்.
தொழிற்துறைக்கு முக்கிய அறிவிப்பு
2030-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் என்ற இலக்கை அடையும் வகையில், புதிய கட்டமைப்புகளை உருவாக்க 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய காலணி மற்றும் தோல் தொழில் கொள்கை உருவாக்கப்படும். தமிழகம் முழுக்க தொழில் வளர்ச்சியை பரவலாக்கும் வகையில், மதுரை, திருவள்ளூர், கோவை, பெரம்பலூர், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் புதிய தொழில்பூங்காங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் 50,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு ஈர்க்கப்படும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு?
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்களைக் கொண்டு சேர்க்கவும் அவர்களுக்கான உரிமைகளைத் தெரிந்துகொள்ளவும், நடமாடும் தகவல் மற்றும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இது முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கான ரூ.1000 எப்போது?
இன்றைய பட்ஜெட்டில் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்டது மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதற்கான திட்டம் பற்றித் தான். ஆனால் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை, எனினும் தகுதிவாய்ந்த பயனாளிகளைக் கண்டறியும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நிதிச்சுமை காரணமாக, இதை அரசின் முதலாண்டில் செயல்படுத்த முடியவில்லை. நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என பி.டி.ஆர் தனது பட்ஜெட்டில் உரையில் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட் அப்களுக்கு என்ன?
தமிழகம் முழுக்க தொழில் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் அந்த நிறுவனங்களின் பொருட்களை, 50 லட்சம் ரூபாய் அளவில் தமிழக அரசு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இது ஆரம்ப காலக்கட்டத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பெரும் உதவிகரமாக இருக்கும் என்பதோடு, மேற்கொண்டு விரிவாக்கம் செய்யவும் பயனுள்ளதாக இருக்கும்.
பிளாக்செயின் தொழில்நுட்பம்
சர்வதேச அளவில் பிளாக் செயின் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் ஒரு அம்சமாக உள்ளது. இதற்கிடையில் இதனை ஊக்குவிக்கும் விதமாக பிளாக் செயின் தொழில் நுட்பத்தினை மேம்படுத்த 190 கோடி ரூபாய் நிதியினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவும் இன்றைய பட்ஜெட்டில் நல்லதொரு அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது.
tn budget 2022: Tamil Nadu budget 2022 highlights
tn budget 2022: Tamil Nadu budget 2022 highlights/மாணவிகளுக்கு ரூ.1000 முதல் தொழிற்துறை பூங்காக்கள் வரை.. தமிழக பட்ஜெட்டில் சூப்பர் ஹிட் அறிவிப்புகள்