தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட அம்சங்களிலிருந்து முக்கியமான 10 ஹைலைட்ஸை பார்ப்போம்.
1. 2014-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 8 ஆண்டுகளாக தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை தொடர்ந்து உயர்ந்துவந்தது. முதல்முறையாக இந்த ஆண்டு சுமார் 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை குறையவுள்ளது. நிதிப்பற்றாக்குறையும் 4.51 சதவிகிதத்திலிருந்து 3.80 சதவிகிதமாக குறைகிறது. அதேசமயம், உக்ரைன் போரின் தாக்கம், தமிழக பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் எனத் தெரிவித்தார் பி.டி.ஆர்.
2. இதேபோல, VAT நடைமுறையில் இருந்தபோது அடைந்த வருவாய் வளர்ச்சியை GST வந்தபின் தமிழக அரசால் அடைய முடியவில்லை. கோவிட் இன்னும் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசு வழங்கும் GST இழப்பீடு வரும் ஜூன் 30 உடன் முடிகிறது. இதனால் வரும் நிதியாண்டில் சுமார் 20,000 கோடி ரூபாய் நிதி இழப்பினை தமிழகம் சந்திக்க நேரிடும் என்றும் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார் பி.டி.ஆர்.
3. அரசுப்பள்ளிகளில் பயின்று பின்னர் உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்களுக்காக ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். ஏற்கெனவே அவர்கள் வேறு ஏதேனும் உதவித்தொகை பெற்றுவந்தாலும், இது கூடுதலாக வழங்கப்படும்.
4. இதேபோல, IIT, IISC, AIIMS உள்ளிட்ட புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில், அம்மாணவர்களின் இளநிலை பட்டப்படிப்பு செலவை அரசே ஏற்கும்; 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5. இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் திட்டமான `நான் முதல்வன்’ திட்டத்துக்கு ₹50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6. போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் இருந்து கல்வியை இடைநிறுத்தம் செய்து திரும்பிய மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர்வதற்கான வழிமுறைகளை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாகவும், அதன்பின் மாணவர்களுக்கான வசதிகளை தமிழக அரசு செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
7. சென்னை மாநகரில் வெள்ள நிவாரணத் திட்டங்களுக்காக ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலை 135 கோடி செலவில் 6 வழிச் சாலையாக அகலப்படுத்தப்படவுள்ளது. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்துக்கு 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
8. ஒலிம்பிக் வீரர்களை தமிழகத்தில் உருவாக்க, `தமிழக ஒலிம்பிக் பதக்க தேடல் திட்டம்’ செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 25 கோடி ரூபாய் இதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடசென்னை இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஆர்.கே.நகரில் சிறப்பு விளையாட்டு வளாகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
9. தந்தை பெரியாரின் கருத்துகளை இந்திய மற்றும் உலகின் 21 மொழிகளில் மொழிமாற்றம் செய்வதற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவை மின்நூல்களாக வெளியிடப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
10. வானிலையை முன்கூட்டியே துல்லியமாகக் கணிப்பதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் 10 கோடி ரூபாய் செலவில் நவீன கட்டமைப்பு ஒன்றை அமைக்கவுள்ளது தமிழக அரசு. இதில் வானிலை பலூன் அமைப்பு, 2 வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேகக் கணினிகள் ஆகியவை இடம்பெறவிருக்கின்றன.
இந்த பட்ஜெட்டில் உங்களைக் கவர்ந்த அம்சம் எது? உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா பட்ஜெட்? உங்கள் கருத்துகளை கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்!