நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததால் பல அதிரடி முடிவுகள் கட்சிக்குள் எடுக்கப்பட்டு வருகிறது. முதலில், தோல்வி காரணமாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கட்சியிலிருந்து தங்களது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் உலா வந்தன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அவர்கள் தங்களது பதவி ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும், காங்கிரஸ் நிர்வாகிகள் அதனை ஏற்றுக்கொள்ளாததால் அத்தகைய முடிவு எடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டன. அடுத்த சில தினங்களிலேயே அதிரடி முடிவாக, காங்கிரஸ் தோல்வியடைந்த 5 மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என சோனியா காந்தி உத்தரவிட்டார். அதையடுத்து உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், மாநிலம் வாரியாக பாஜகவை எதிர்த்துப் போராடினால்தான், அவர்களை தோற்கடிக்க முடியும் என தனியார் ஊடக பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
சிதம்பரம், “ஆகஸ்ட் மாதத்தில் நாங்கள் முழுநேர தலைமைத்துவத்தைப் பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். “ஒவ்வொரு கட்சியும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இது மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பொருந்தும். மாநிலம் வாரியாக போராட வேண்டும். வங்காளத்தில் திரிணாமுல் தலைமையில் போராட வேண்டும். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியுடன் போராட வேண்டும். தலைமையாக, மாநிலம் வாரியாக பாஜகவை எதிர்த்துப் போராடினால், அதைத் தோற்கடிக்க முடியும்.” என பேசினார்.
மேலும் இதே பேட்டியில் உ.பி தேர்தல் தோல்வி குறித்துப் பேசிய சிதம்பரம், “உ.பி.யில் – பல ஆண்டுகளாகக் கட்சி வறண்டு கிடப்பதை நாம் அனைவரும் அறிவோம். முதலில் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும், அதன் பிறகு தேர்தலில் போட்டியிட வேண்டும் என நான் தலைமைக்கு எச்சரித்திருந்தேன்” என கூறியிருந்தார்.