புதுடில்லி: கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் கோவிட் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனால், உஷாரடைந்துள்ள மத்திய அரசு, கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டாம் என மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளதுடன், பரிசோதனை, சிகிச்சை, தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.
கடந்த ஜன.,மாதம் முதல், உலகளவில் குறைந்து வந்த கோவிட் பெருந்தொற்று பரவல், தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. முதலில், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வேகமெடுத்த பரவல் தற்போது ஐரோப்பாவிலும் வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தான் பரவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 7 நாட்களில் பரவல் விகிதம் 5 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. தென் கொரியாவில் நேற்று(மார்ச் 17) அதிகபட்சமாக 6.2 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்நாட்டில் மட்டும் கடந்த 7 நாட்களில் 24 லட்சம் பேருக்கும், ஜெர்மனியில் 15 லட்சம் பேருக்கும், வியட்நாமில் 12 லட்சம் பேருக்கும், பிரான்சில் 5.2 லட்சம் பேருக்கும், பிரிட்டனில் 4.8 லட்சம் பேருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதியானது.
கோவிட் முதலில் உருவான சீனாவின் வூஹான் நகரில் அதிகபட்சமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதால் 30 லட்சம் பேர் வசிக்கும் நகரில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் நகரிலும் ஒமைக்ரானால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தெரிய வருகிறது. அங்கு இறந்தவர்களின் உடலை வைக்க போதிய இடமில்லாமல், கப்பல் கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பரவல் அடுத்து, அமெரிக்காவில் நிகழக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு கோவிட் உச்சத்தில் இருந்த போது, அதிகபட்சமாக ஒரே நாளில் 3,500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களுக்கு கடிதம்
அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கோவிட் உருமாற்றம் பற்றி தெரிந்து கொள்ள, தேவையான அளவு பரிசோனை செய்ய வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மாஸ்க் அணிதல், கூட்டங்களை தவிர்த்தல், அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.