பெங்களூரு : ”மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்க கூடுதல் நிதியுதவி வழங்கப்படும்,” என மகளிர், குழந்தைகள் நலம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் தெரிவித்தார்.
சட்டசபை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:அமைச்சர் ஹாலப்பா ஆச்சார்: ஒன்பது ஆண்டுகளில், மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, 3,033 மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் நிதியிலிருந்தும் மூன்று சக்கர நாற்காலி வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளின், மூன்று சக்கர வாகனங்களுக்கு, அதிக தேவை உள்ளது. எனவே பல்வேறு வழிகளில், வருவாய் சேகரித்து மூன்று சக்கர நாற்காலிகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும், மாத நிதியுதவியை அதிகரிப்பது பற்றியும் பரிசீலிக்கப்படுகிறது.
காங்., — சரத் பச்சேகவுடா: எங்களின் ஹொஸ்கோட் தொகுதியில், 1,700 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கும் மூன்று சக்கர நாற்காலி தாருங்கள்.
காங்., — ரமேஷ்குமார்: மாற்றுத்திறனாளிகளுக்கு, நீங்கள் மூன்று சக்கர வாகனங்கள் வழங்காவிட்டால், அவர்களை நிரந்தர ஊனமுற்றவர்களாக ஆக்கியதாகிவிடும். என் தொகுதியில் 100 பேரின் பட்டியல் தயாரித்துள்ளேன். ஆனால் நிதியுதவி இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களை, எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பு கொண்டால், உதவி கிடைப்பது கஷ்டம். அரசே இதற்காக முயற்சித்தால், உதவி கிடைக்கும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
Advertisement