இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கச்சாய் எண்ணெய் முடிந்து விட்டது என்ற காரணத்தினால், நாளை மறுதினம் (20) முதல் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திரிப்பு ஆலையை மூட நேரிடும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் நாட்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான கச்சாய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படவில்லை பெட்ரோலியம் – துறைமுகம் மற்றும் மின்சார சபை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக காலவரையறையின்றி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மூட நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டால், இலங்கை தற்போது எதிர்நோக்கி இருக்கும் எரிபொருள் நெருக்கடி மேலும் உக்கிரமடையும். அத்துடன் மண் எண்ணெய் மற்றும் விமானத்திற்கான எரிபொருளையும் இறக்குமதி செய்ய நேரிடும்.
இதனை தவிர எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டால், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் 2 ஆயிரம் மெற்றி தொன் கழிவு எண்ணெய் கிடைக்காமல் போகும். இதனால், மின் உற்பத்தியும் குறைந்து போகும்.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டாலும் அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால், ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவையும் வழங்க வேண்டும். இது மிகப் பெரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மற்றுமொரு சுமையாக மாறும் எனவும் ஆனந்த பாலித மேலும் தெரிவித்துள்ளார்.