மாஸ்கோ:
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 23வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துகின்றன. பொதுமக்கள் தங்கியிருக்கும் கட்டிடங்களும் ரஷிய படைகளின் இலக்காவதால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன. தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை ரஷியா நிராகரித்து, தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
இது ஒருபுறமிருக்க ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கு உள்நாட்டிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. போருக்கு எதிராக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். நாளுக்கு நாள் போர் எதிர்ப்பு குரல் வலுத்து வருகிறது. அவ்வகையில், உக்ரைன் மீதா போருக்கு கண்டனம் தெரிவித்த ரஷிய முன்னாள் துணை பிரதமர் ஆர்கடி டிவோர்கோவிச் (வயது 49), ரஷியாவின் அறிவியல் தொழில்நுட்ப உயர் அமைப்பான ஸ்கால்கோகோ அறக்கட்டளையின் தலைவர் பதவியில் இருந்து இன்று விலகினார்.
போருக்கு எதிராக கருத்து தெரிவித்ததன்மூலம் ஆர்கடி டிவோர்கோவிச் தேசத் துரோகம் செய்திருப்பதாகவும் அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என எம்.பி. ஒருவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆர்கடி டிவோர்கோவிச் கடந்த 2012ம் ஆண்டில் இருந்து 2018ம் ஆண்டு வரை துணை பிரதமராக பதவி வகித்தார். 2018ல் இருந்து ஸ்கால்கோகோ அறக்கட்டளையின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.