தமிழக சட்டசபையில் 2022- 23ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
இந்நிலையில் ரஷ்யா – உக்ரைன் காரணமாக உலகளாவிய விநியோகத் தடையால் 2023-ம் நிதியாண்டுக்கான வரி வருவாயில் பாதிப்பு ஏற்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலகளாவிய விநியோகத் தடையால் 2023-ம் நிதியாண்டுக்கான மாநிலத்தின் வரி வருவாயில் பாதிப்பு ஏற்படும். வரவிருக்கும் நிதியாண்டு சவாலானதாகவும், நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்ததாகவும் இருக்கும். உக்ரைனில் நடந்து வரும் போர் உலகப் பொருளாதார மீட்சியை சீர்குலைக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் உயரக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
கொரோனா முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்று முன்கூட்டியே சொல்ல முடியாது. அகவிலைப்படி திருத்தம் மற்றும் கடன் தள்ளுபடியின் முழு தாக்கம் அடுத்த ஆண்டு அனுபவிக்கக்கூடும்.
மாநில மின் பயன்பாட்டு நிறுவனமான டான்ஜெட்கோவின் முழு இழப்பையும் மாநிலம் ஏற்க வேண்டும். தற்போது பொருளாதாரம் மீண்டு வருவதால், அரசு முன்னுரிமைகளை மறுசீரமைத்து வருகிறது. நலத் திட்டங்களில் சமரசம் செய்யாமல் சமூக உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. குஜராத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை அறிமுகம்