உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில் ரஷ்யப் படைகள் உக்ரைன்மீது கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது. இதனால் அங்கு இருக்கும் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் போரினால் பல மக்களும் குழந்தைகளும் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யப் படைகள் கீவ் நகரில் உள்ள மக்கள் குடியிருப்புகளில் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் 67 வயதான பிரபல உக்ரைன் நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் பலியானார்.
நடிகை ஒக்ஸானாவின் மறைவை உறுதிசெய்த அவரது யங் தியேட்டர் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் “கிவ் நகரின் குடியிருப்பு கட்டிடங்களின் மீது நடந்த ராக்கெட் தாக்குதலினால், உக்ரைனின் நல்ல தகுதி வாய்ந்த கலைஞரான ஒக்ஸானா ஷ்வெட்ஸ் பலியானார்.” என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் ஹாலிவுட் பத்திரிக்கையாளர் ஒருவர் ‘மரியாதைக்குறிய உக்ரைனின் கலைஞர்’ மறைந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் நடிகை பலியான சம்பவம் உக்ரைன் மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.