பெங்களூரு: ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக (டிஆர்டிஓ) அதிகாரிகள் நேற்று கூறியதாவது: டிஆர்டிஓ உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஹைபிரிட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெங்களூருவில் 7 மாடி கட்டிடத்தை 45 நாட்களில் கட்டி முடித்துள்ளது. ஹைபிரிட் கட்டுமான தொழில் நுட்பத்தில் நிரந்தர கட்டிடத்தை இவ்வளவு குறைந்த காலத்தில் கட்டி முடித்திருப்பது சாதனை யாகும். இந்த கட்டிடத்தை நகர்த்துவதற்கும் ஏதுவாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் கட்டுமானத் துறையின் வரலாற்றில் முதல் முறையாகும். இந்த கட்டிடம் 5ஜி மேம்பட்ட உள்நாட்டு போர் விமானங்களின் தயாரிப்புக்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கட்டிடத்தை நேற்று திறந்து வைத்தார். ராஜ்நாத் சிங் கூறும்போது, ‘‘உள்நாட்டு போர் விமான தயாரிப்புக்காக மிக குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவிலான கட்டிடத்தை டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் கட்டி சாதனை படைத்தனர்’’ என்று பாராட்டினார்.