பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில், மாநில கல்வியமைச்சர் ஜிது வகானி, பள்ளி பாடத்திட்டத்தில் பகவத்கீதையை சேர்ப்பது குறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “2022/23 கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பகவத்கீதை இருக்கும். பகவத்கீதையின் மதிப்புகள், கொள்கைகள் மற்றும் முக்கியத்துவம் ஆகியவை அனைத்து மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பகவத்கீதை 6-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த அறிவிப்புக்குப் பின்னர் குஜராத் அமைச்சரை, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி கல்வியமைச்சர் சிசோடியா விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், “நிச்சயமாக இது ஒரு பெரிய நடவடிக்கை. ஆனால் அதை அறிமுகப்படுத்துபவர்கள் முதலில் கீதையின் விழுமியங்களைப் பயிற்சி செய்ய வேண்டும். அவர்கள் கீதையைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அவர்களின் செயல்கள் ராவணனைப் போல் உள்ளது” என்றார்.