சென்னை: வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களுக்கு ரூ.15 கோடியில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட உள்ளதாக வனத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று ஆய்வுசெய்தார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கரோனா பேரிடர் காலத்தில் வண்டலூர் பூங்காவுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பூங்கா மற்றும் விலங்குகள் பாரமரிப்பு, மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.6 கோடியை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
இந்தியாவிலேயே வண்டலூர் உயிரியல் பூங்கா மிகவும் சிறப்புவாய்ந்தது. இங்கு பார்வையாளர் களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூ.15 கோடியில் கருத்துரு அனுப்பி பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது, இதற்கானநிதி ஒதுக்கீடு, வரும் நிதிநிலைஅறிக்கையில் பெறப்பட்டு விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர்களை சீரமைக்கவும், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கான கூடாரங்கள் சேதமடைந்துள்ளதை முழுமையாக புதுப்பிக்கவும் பூங்கா அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூங்காவில் விலங்குகளுக்கு நல்ல உணவு வழங்கவும்,கோடைக்காலத்தில் குடிநீர் வழங்கவும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயிரியல் பூங்காவில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்கள்,பகுதி நேரப் பணியாளர்களின் கோரிக்கையின்படி, தகுதியானவர்களுக்கு சட்டப்படி வழங்கவேண்டிய சலுகைகள் மற்றும் பணிவரன்முறை, முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதல்படி செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, பூங்கா இயக்குநர் வி.கருணப்பிரியா, துணை இயக்குநர் ஆர்.காஞ்சனா, கிண்டி தேசிய பூங்கா வன உயிரினக் காப்பாளர் ஈ.பிரசாந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.