நொய்டா: நொய்டாவில் கட்டுமான விதிகளைமீறி கட்டப்பட்ட சூப்பர்டெக் நிறுவனத்தின் இரட்டைக் கோபுரம் மே 22 அன்று தகர்க்கப்பட உள்ளது. 4 டன் வெடி மருந்துகள் இதற்குப் பயன்படுத்தப்பட உள்ளன. தகர்ப்புப் பணி மதியம் 2.30 மணி அளவில் மேற்கொள்ளப்படும் என்றும் 9 வினாடிகளில் அந்தஇரு கட்டிடங்களும் தகர்க்கப்பட்டுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட சூப்பர்டெக் நிறுவனம் நொய்டாவில் கட்டிய 40 தளங்கள் கொண்ட இரு அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுமான விதிகளைப் பின்பற்றவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், இரட்டைக் கோபுரத்தை தகர்க்க கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து சூப்பர்டெக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தீர்ப்பு வழங்கியது. அந்த இரு கட்டிடங்களும் மூன்று மாதங்களுக்குள் தகர்க்கப்பட வேண்டும் என்றுஉத்தரவிட்டது. இதன்படி இவ் விரு கட்டிடங்களைத் தகர்க்கும் பணியை மும்பையைச் சேர்ந்த எடிஃபைஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.