விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் சாலை விபத்துகள் நடப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அளிக்கிறது.
சாலை விபத்துக்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு இணையாக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சாலைகளை உருவாக்கிட வேண்டும். குறிப்பாக விபத்து நடக்கக்கூடும் நெடுஞ்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் உள்ள இடங்களில் சிக்னல்கள், வேகத்தடைகள், கண்காணிப்பு கேமிராக்களை அதிக அளவில் பொருத்த வேண்டும். இதன் மூலம் விபத்துகளை தவிர்க்க முடியும்.
விபத்தில்லா தமிழகம் என்ற நிலையை உருவாக்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.