புது டெல்லி,
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தனது முதல் லீக் ஆட்டத்தில் 27-ந்தேதி பஞ்சாப் கிங்சை சந்திக்கிறது. பெங்களூரு அணியின் கேப்டனாக நீண்ட காலமாக பணியாற்றிய விராட் கோலி, ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத விரக்தியில் பொறுப்பில் இருந்து விலகினார். ஒரு வீரராக அந்த அணியில் நீடிக்கிறார். பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக தென்ஆப்பிரிக்காவின் பாப் டு பிளிஸ்சிஸ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பெங்களூரு அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளைன் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), முன்னாள் கேப்டன் கோலி குறித்து நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
கேப்டன் பதவி, நிச்சயம் விராட் கோலிக்கு மிகப்பெரிய சுமையாக இருந்திருக்கும். அப்படிப்பட்ட பொறுப்பை கையாள்வது முடிவுக்கு வந்து விட்டது என்பது அவருக்கு தெரியும். அதுவே அவரது ஆட்டத்திறனில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் இப்போது அந்த சுமையில் இருந்து விடுபட்டு விட்டார். இது எதிரணிகளுக்கு அபாயகரமான செய்தியாக இருக்கும்.
கொஞ்சம் ரிலாக்சாக இருப்பது அவருக்கு அற்புதமான ஒன்று. அடுத்த சில ஆண்டுகளில் அவர் எந்தவித நெருக்கடியும் இன்றி அனுபவித்து உற்சாகமாக விளையாட முடியும். அவருக்கு எதிராக விளையாடிய ஆரம்ப காலத்தில் ஆக்ரோஷமான எதிராளியாக தென்படுவார். எப்போதுமே ஆட்டத்தை தனக்குள் எடுத்துக் கொண்டு விளையாட முயற்சிப்பார். ஆனால், இந்த ஆண்டில் இதுவரை விளையாடிய சர்வதேச ஆட்டங்களில், அவர் தனது உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டதை பார்க்க முடிந்தது. முடிவுகளை எடுப்பதிலும் கட்டுக்கோப்புடன் செயல்படுகிறார். உண்மையிலேயே இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
கோலியை பொறுத்தவரை அவருக்கு எதிராக ஆடும் போது முகபாவம் உணர்வுபூர்வமாக பரவசப்படுத்தும். அதே சமயம் இணைந்து விளையாடும் போது அவருடனான உரையாடல்கள் உண்மையிலேயே நன்றாக இருக்கும். அது எனக்கு உற்சாகம் தரக்கூடியது.
இவ்வாறு மேக்ஸ்வெல் கூறினார்.