புதுடெல்லி: ‘காங்கிரஸ் கட்சி தலைமை குறித்து எந்த கேள்விக்கும் இடமில்லை’ என சோனியாவை சந்தித்த பின் ஜி-23 குழுவின் தலைவரான குலாம் நபி ஆசாத் பேட்டி அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சி கடந்த 2014, 2019 ஆகிய இரு மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், பல மாநிலங்களிலும் ஆட்சியை பறிகொடுத்து வருகிறது. இதனால், கட்சி தலைமை குறித்து காங்கிரசில் அதிருப்தி ஏற்பட்டது. மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 தலைவர்கள் அதிருப்தி அணியில் சேர்ந்தனர். இவர்கள் ஜி-23 தலைவர்கள் என அழைக்கப்படுகின்றனர். சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக, பஞ்சாப்பில் ஆட்சியை இழந்தது. உபியில் 2 சீட்டில் மட்டுமே வென்றது.இதனால், மீண்டும் ஜி-23 தலைவர்கள் கட்சியில் மறுசீரமைப்பு செய்ய குரல் கொடுக்கத் தொடங்கினர். அதே சமயம், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற சோனியா காந்தி, தானும் தனது மகன் ராகுல், மகள் பிரியங்கா காந்தி மூவரும் கட்சிப் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யத் தயார் என்றார். ஆனால், செயற்குழு ஒப்புக் கொள்ளவில்லை. சோனியா தலைமை மீது முழு நம்பிக்கை வைப்பதாக செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையே, ஜி-23 தலைவர்கள் கடந்த புதன்கிழமை முதல் அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தி தீவிர ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து 3 நாட்கள் ஜி-23 தலைவர்கள் கூட்டம் நடத்திய நிலையில் நேற்று முன்தினம் இக்குழுவின் தலைவர்களில் ஒருவரான அரியானா முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். அப்போது, கட்சியில் யார் முடிவுகளை எடுக்கிறார்கள் என ஹூடா விளக்கம் கேட்டதாகவும், கட்சியின் பல முடிவுகளை தாங்கள் செய்தித்தாள்களில் படித்து தான் தெரிந்து கொள்வதாகவும் அவர் தனது கவலையை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ஜி-23 தலைவர்கள் எந்த ஒரு கட்சி விரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவிடம் தெரிவித்த பிறகே கூட்டத்தை நடத்தி வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.இந்நிலையில், ஜி-23 குழுவின் முக்கிய தலைவரான குலாம் நபி, சோனியா காந்தியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் தலைவருடன் ஒரு சிறந்த சந்திப்பு நடந்தது. இது உங்களுக்கு வேண்டுமானால் ஒரு செய்தியாக இருக்கலாம். ஆனால், எங்களைப் பொறுத்த வரையில் ஒரு வழக்கமான சந்திப்புதான். வரவிருக்கும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை எவ்வாறு ஒற்றுமையுடன் தயார்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்தோம். கட்சி தலைமை குறித்து எந்த கேள்வியும் இல்லை. செயற்குழுவில் சோனியாவை பதவி விலக வேண்டுமென யாரும் கேட்கவில்லை. கட்சியை வலுப்படுத்துவதற்கான எங்களின் பரிந்துரைகளை கட்சித் தலைவர் சோனியாவிடம் தெரிவித்துள்ளோம்,’’ என்றார்.