பெங்களூரு: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அம்மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து மாணவிகள் தொடுத்த வழக்கில் அரசின் உத்தரவு செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முஸ்லிம் மாணவிகள் ஆங்காங்கே தேர்வை புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில் ஹிஜாப் தடையை கண்டித்தும், அதற்கு அனுமதி கோரியும் முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு எஸ்டிபிஐ, சிஎப்ஐ உள்ளிட்ட அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.
பெங்களூருவில் சிவாஜிநகர், டேனரி சாலை, கே.ஆர்.மார்க்கெட் ஆகிய பகுதிகளில் முஸ்லிம் வியாபாரிகள் நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை தங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதே போல மங்களூரு, பட்கல், ஹுப்ளி உள்ளிட்ட சில இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இந்தப் போராட்டத்தால் கர்நாடகா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.