சோபியா:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷியாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து எச்சரிக்கை விடுத்துள்ளன. தூதர்களையும் வெளியேற்றுகின்றன.
இந்நிலையில், பல்கேரியாவில் உள்ள ரஷிய தூதரக அதிகாரிகள் 10 பேரை ஏற்றுக்கொள்ள முடியாத அதிகாரிகளாக பல்கேரிய அரசு அறிவித்துள்ளது. தூதரக அந்தஸ்துடன் ஒத்துப்போகாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறிய பல்கேரியா அரசு, அவர்களை 72 மணி நேரத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி கெடு விதித்துள்ளது.
தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவது குறித்து பிரதமர் கிரில் பெட்கோவிடம் ஆலோசிக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக ரஷிய தூதருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் பல்கேரிய வெளியுறவுத்துறை அமைச்சகம், தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
பல்கேரியாவில் இருந்து இரண்டாவது முறையாக ரஷிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுகின்றனர். இதற்கு முன்பு மார்ச் 2ம் தேதி உளவு பார்த்த குற்றச்சாட்டு எழுந்ததால் 2 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது.
பனிப்போரின் போது ரஷியாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த பல்கேரியா, இப்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டித்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உறுப்பு நாடாக உள்ளது. கடந்த அக்டோபர் 2019ஆம் ஆண்டு முதல் உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் 8 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியுள்ளது.
இதேபோல் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உறுப்பு நாடான சுலோவாக்கியா, கடந்த திங்களன்று 3 ரஷிய தூதரக ஊழியர்களை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.