தனது பேச்சை கேட்காமல் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத சென்றதாக கூறி தன்னுடைய மனைவி மீது கணவரே ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பிர்ஹாம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கீதா ஆருணி. 17 வயதான இவருக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (25) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கீதா, திருமணமானதும் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். குழந்தையும் பிறந்ததால் அவரால் படிப்பை தொடர முடியாமல் போனது. இதனிடையே, தமது பள்ளி ஆசிரியர்களின் உதவியால் கடந்த ஆண்டு மீண்டும் 10-ம் வகுப்பில் சேர்ந்தார் கீதா. ஆனால், படிப்பை தொடர்வது கணவர் ரமேஷுக்கு பிடிக்கவில்லை. படிப்பை விட்டுவிடுமாறு பல முறை கூறியும் கீதா அதை கேட்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற கீதா, அங்கிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். கடந்த வாரம் முதலாக, அவருக்கு பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கியது. இந்நிலையில், நேற்று அவரை தொடர்பு கொண்ட கணவர் ரமேஷ், தேர்வு மையம் எங்கு இருக்கிறது எனக் கேட்டுள்ளார். கீதாவும், கணவர் தன்னை பார்க்க விரும்புவதாக நினைத்துக் கொண்டு, முகவரியை கொடுத்துள்ளார். அரை மணிநேரத்தில் அங்கு வந்த ரமேஷ், கீதாவிடம் தேர்வு எழுத வேண்டாம். வீட்டுக்கு சென்றுவிடலாம் எனக் கூறியிருக்கிறார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த கீதா, இதுதான் கடைசித் தேர்வு. இதனை கட்டாயம் எழுத வேண்டும் எனக் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், தான் கொண்டு வந்திருந்த ஆசிட்டை கீதாவின் முகத்திலும், உடலிலும் வீசினார். இதனால் வலியில் அலறித்துடித்த கீதா, அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் கீதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷையும் அவர்கள் பிடித்து வைத்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார், ரமேஷை கைது செய்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM