திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி வழங்குவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த மாதத்திற்கான பௌர்ணமி அன்று கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த மாதத்துக்கான பௌர்ணமி நேற்று மதியம் தொடங்கி வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதன் காரணமாக பக்தர்கள் நேற்று காலையில் இருந்தே தனித்தனியாக கிரிவலம் சென்றனர். இதில் வழி நெடுக பலர் அன்னதானம் வழங்கினர். கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலை கிரிவலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டது போன்று காட்சியளிக்கிறது.