புதுடில்லி: வரும் 2024 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, சமீபத்தில் வெற்றி பெற்ற நான்கு மாநிலங்களில், அமைச்சர்கள் தேர்வை பா.ஜ., மிக கவனமுடன் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டாவது முறை
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பஞ்சாபை தவிர, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில், பா.ஜ., மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த நான்கு மாநிலங்களில் அமைச்சர்களை தேர்வு செய்வது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பலமுறை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இவர், உ.பி., முதல்வராக வரும் 21ல், இரண்டாவது முறையாக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை, யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில், 20 பேருக்கு புதிதாக அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
பா.ஜ.,வின் சுவதந்திர தேவ் சிங், துணை முதல்வராக நியமிக்கப்படலாம். நான்கு மாநிலங்களில் அமைச்சர்கள் தேர்வை, பா.ஜ., தலைமை மிகவும் கவனமாக செய்து வருகிறது. வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் குறித்த அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு, மாநில தலைமைக்கு உத்தரவிட்டுள்ளது. ஜாதி, உள்ளூர் அரசியல் நிலவரம், எஸ்.சி., – எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கான பிரதிநிதித்துவம், இளைஞர்கள், பெண்கள் பங்களிப்பு, கல்வி தகுதி ஆகியவற்றின் அடிப்படையில், அமைச்சர்கள் தேர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலியுறுத்தல்
‘பா.ஜ.,வுக்கும், நாட்டுக்கும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான தலைமையை உறுதி செய்யப் போவது இளைஞர்கள் தான். எனவே, அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்’ என, ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், தங்கள் பார்லி., தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், பா.ஜ., பின்னடைவை சந்தித்த 100 தொகுதிகளை, ஒவ்வொரு எம்.பி.,யும் அடையாளம் காண வேண்டும். பின்னடைவுக்கான காரணம் மற்றும் தீர்வையும் அவர்கள் கூற வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும், 2024 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, நான்கு மாநிலங்களுக்கான அமைச்சர்கள் தேர்வை, பா.ஜ., தலைமை கவனமுடன் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.