சென்னை: முதுநிலை பட்டம் படிக்காமல் நேரடியாக பிஎச்டி ஆய்வுப் படிப்பில் சேரும் புதிய திட்டத்துக்கான வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது.
நம் நாட்டின் உயர்கல்வித் துறையில் தேசிய கல்விக் கொள்கை – 2020-ன் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, தற்போதைய உயர்கல்வி அமைப்புகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதாவது, ஏற்கெனவே 3 ஆண்டுகால இளநிலை படிப்புகள் நடைமுறையில் உள்ள நிலையில், புதிதாக 4 ஆண்டுகால படிப்புகளை அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்ததிட்டத்தின்படி, 4 ஆண்டுகால இளநிலை படிப்பை நேரடியாகவும், தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மூலமாகவும் மாண வர்கள் படிக்கலாம்.
இதுதவிர, இந்த படிப்பில் சேரும் மாணவர்கள் இடையிலேயே தங்கள் கல்வியை நிறுத்திவிட்டு, சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தொடரவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி முதலாமாண்டில் வெளியேறுபவர்களுக்கு சான்றிதழ், 2-ம் ஆண்டில் பட்டயச் சான்று,3-ம் ஆண்டு இளநிலை பட்டம் மற்றும் 4-ம் ஆண்டு முடிப்பவர்களுக்கு இளநிலை பட்டத்துடன் கூடிய ஹானர்ஸ் சான்று அளிக்கப்படும்.
இந்த 4 ஆண்டுகால இளநிலை படிப்பை முடித்த மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதி நேரடியாகபிஎச்டி சேரலாம் என்பன உட்படபல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த திட்டத்தை 2022-23-ம் கல்வியாண்டில் இருந்து நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏதுவாக பிஎச்டி படிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்துவித உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மார்ச் 31-க்குள் கருத்து கூறலாம்
தேசிய கல்விக்கொள்கை 2020-ன் அம்சங்களை அமல்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் பிஎச்டிஆராய்ச்சி படிப்புகளில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதிகள், தேர்வு முறை உட்பட அம்சங்கள் குறித்த வரைவு அறிக்கையை யுஜிசி தற்போது வடிவமைத்துள்ளது.
அதன் விவரங்கள் /www.ugc.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்த கருத்துகளை கல்வியாளர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் மேற்கண்ட யுஜிசி வலைதளத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புதெரிவித்து வருவது குறிப்பிடத் தக்கது.