4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு அறிமுகம்- பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு

புதுடெல்லி:

தற்போது, இளங்கலை பட்டப்படிப்பு 3 ஆண்டுகளாக உள்ளது. அத்துடன், 4 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக உயர் கல்வியை ஒழுங்குபடுத்தும் பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது.

இதுதொடர்பான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு, 8 செமஸ்டர்களாக பிரிக்கப்படும். முதல் 3 செமஸ்டர்களுக்கு இயற்கை அறிவியல், மனிதநேயம், சமூக அறிவியல் ஆகியவை பொதுவான அறிமுக படிப்புகளாக இருக்கும். மாநில மொழிகள், ஆங்கிலம், யோகா, செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனாலிட்டிக்ஸ் ஆகியவையும் பொதுவான படிப்புகளாக இருக்கும்.

மூன்றாவது ஆண்டில், மாணவர்கள் தாங்கள் ஆழ்ந்து படிக்க விரும்பும் பாடத்தை தேர்வு செய்யலாம். அரசியல், அறிவியல் தொடங்கி, வானியல்வரை பலதரப்பட்ட பாடங்களில் இருந்து தேர்வு செய்யலாம். கடைசி 2 செமஸ்டர்களில், தங்கள் மேஜர் பாடம் அடிப்படையிலான ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம்.

4 ஆண்டு படிப்புக்கு கிரெடிட் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மொத்தம் 160 கிரெடிட்கள் இருக்கும். 15 மணி நேர வகுப்பறை கற்பித்தலுக்கு 1 கிரெடிட் வழங்கப்படும்.

தேவையான கிரெடிட் பெற்றிருந்தால், படிப்புக்கிடையே ஒரு பாடத்தில் இருந்து இன்னொரு பாடத்துக்கு மாறிக் கொள்ளலாம். தாங்கள் விரும்பிய பாடத்தை தேர்வு செய்து கொள்ளும் வசதி மாணவர்களுக்கு அளிக்கப்படும்.

எப்போது வேண்டுமானாலும் படிப்பில் இருந்து வெளியேறலாம். மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். அவர்கள் பெற்ற கிரெடிட்டுகளுக்கு ஏற்ப சான்றிதழோ, பட்டமோ அல்லது பட்டயமோ வழங்கப்படும். மேலும், ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து மற்றொரு கல்வி நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளலாம்.

நேரடி வகுப்பில் சேர்ந்தும் படிக்கலாம். ஆன்லைன் வகுப்பிலும் படிக்கலாம். அல்லது இரண்டும் கலந்த முறையில் படிக்கலாம். எந்த முறையிலும் இடையிலேயே மாறிக் கொள்ளலாம்.

ஒரு செமஸ்டர் என்பது 90 வேலை நாட்களை கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு கல்வி ஆண்டு, 2 செமஸ்டர்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பணி வாரமும் 40 மணி நேர கற்பித்தல் நேரத்தை கொண்டதாக இருக்கும்.

கோடை காலம் என்பது 8 வாரங்களை கொண்டதாக இருக்கும். அரியர் பாடங்களை முடிப்பதற்காக கோடைகால வகுப்புகளை நடத்தலாம்.

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதை அதிகரிக்கும் நோக்கத்தில், தற்போது மிகுந்த முக்கியத்துவம் பெற்று வரும் செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனாலிட்டிக்ஸ் போன்ற பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.