இஸ்லாமாபாத்-நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள குழப்பங்களில், ராணுவம் எந்த தரப்புக்கும் ஆதரவாக இல்லாமல் நடுநிலை வகிப்பதாக, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
போர்க்கொடி
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 73 ஆண்டு காலங்களில், கிட்டத்தட்ட பாதி ஆண்டுகளில், ராணுவ ஆட்சியே நடந்துள்ளது. எந்த அரசு அமைந்தாலும், ராணுவத்தின் கையே ஓங்கியிருக்கும்.இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இது தொடர்பாக, பார்லிமென்டில், நாளை விவாதிக்கப்பட உள்ளது. வரும் 28ல் ஓட்டெடுப்பு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இம்ரான் கானுக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் போர்க்கொடி துாக்கிஉள்ளனர். இதனால், இம்ரான் கான் அரசு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.நடுநிலைஇப்பிரச்னைகள் குறித்து, தனியார், ‘டிவி சேனல்’ ஒன்றுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் பிரிவின் தலைவருமான ஷபாஸ் ஷெரீப் கூறியுள்ளதாவது:நாட்டின் தற்போதைய மோசமான பொருளாதார நிலைக்கு, பிரதமர் இம்ரான் கானே முழு பொறுப்பு.
அதனால்தான், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளோம்.அதில் அரசு தோல்வி அடைந்துவிட்டால், இடைக்கால பிரதமராக என்னை முன்னிறுத்துவதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இது குறித்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள என் சகோதரர் நவாஸ் ஷெரீப்பே முடிவு செய்வார்.தற்போது நாட்டில் ஏற்பட்ட இந்த அரசியல் குழப்பங்களில், ராணுவம் எந்த தரப்புக்கும் ஆதரவாக செயல்படாமல் நடுநிலை வகிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement