சென்னை:
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை பொதுபட்ஜெட் மற்றும் வேளாண்பட்ஜெட் மீது விவாதம் நடைபெற உள்ளது.
இதன்மீது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காரசாரமாக பேச உள்ளனர். இதில் யார்-யார் பேச உள்ளனர் என்பது இனிமேல் தான் முடிவு செய்யப்படும்.
இதுபற்றி முடிவு செய்ய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சட்டசபையில் என்னென்ன பிரச்சினைகளை எழுப்புவது, பட்ஜெட் விவகாரத்தில் யார்-யார் பேசுவது? என்பது பற்றி முடிவு செய்யப்படுகிறது.