தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு உள்ள குறைகளைத் தீர்க்க வரும் மார்ச் 21-ம் தேதி ஆன்லைன் மூலமாக குறைதீர்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மக்கள் சந்திக்கும் குறைகளைத் தீர்ப்பதற்காக வருகிற மார்ச் 21-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் இணைய வழி வெபினார் நிகழ்ச்சியை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடத்த உள்ளது.
இதுகுறித்து மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர்-1 (சென்னை வடக்கு மண்டலம்) சி.அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை பெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகளை [email protected] என்ற இ-மெயில் முகவரி மூலம் அனுப்பவேண்டும். மின்னஞ்சல் அனுப்பும்போது `பென்ஷன் அதாலத்’ என்று குறிப்பிட்டு, பெயர், வருங்கால வைப்பு நிதி கணக்கு எண், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
மார்ச் 21-ம் தேதி நடக்கும் இணையவழி குறைதீர்ப்பு முகாமில் அவர்களுடைய குறைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படும். இந்த இணைய வழி முகாமில் கலந்துகொள்வதற்கான லிங்க் ஓய்வூதியதாரர்களின் இணையதள முகவரிக்கு அல்லது தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும்.