காபூல் :
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள், தங்களின் முந்தைய ஆட்சியில் இருந்ததைபோல கடுமையாக நடந்து கொள்ள மாட்டோம் என்றும், தற்போதைய அரசு அனைவருக்குமான நவீன அரசாக இருக்கும் எனவும் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அதற்கு நேர் மாறாக அவர்கள் நாட்டில் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்ப தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இது குறித்து தலிபான்கள் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆப்கானிஸ்தான் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட எந்த வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களையும் ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்படுகிறது. தடையை மீறுவதற்கான எந்த சாக்குப்போக்குகளையும் ஏற்க மாட்டோம்” என கூறினார்.
மேலும் அவர், “ஆப்கானிஸ்தானில் திரைப்படத் துறை இல்லை. அதே போல் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை மாற்றக்கூடிய நிகழ்ச்சிகள் அல்லது திரைப்படங்கள் எதுவும் இல்லை. இந்த கட்டுப்பாடு மக்கள் தொலைக்காட்சி பெட்டிகளை அணைக்க வேண்டும் என்பதாகும்” என்றார்.
ஆப்கானிஸ்தானில் இதுவரை இந்தியா மற்றும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை உட்பட சில வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.