இன்னும் சில ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீரில் மத்திய பாதுகாப்பு ரிசர்வ் படையினர் தேவை என்ற நிலை இருக்காது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
சிஆர்பிஎப்
எனப்படும் மத்திய பாதுகாப்பு ரிசர்வ் படையின் எழுச்சி தின விழா, ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: இந்தியாவில் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வை வழங்கும் பணியை சிஆர்பிஎப் நீண்ட காலமாக செய்து வருகிறது. இக்கட்டான சூழலில் இருந்த மக்களை, வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட செய்துள்ளனர்.
தேர்தல், ஜனநாயகத்தின் திருவிழாவாகவும், ஜனநாயக நாட்டின் ஆன்மாவாக நேர்மையான தேர்தல் உள்ளது. லோக்சபா அல்லது எந்த சட்டசபைக்கு தேர்தல் நடந்தாலும், அங்கு அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதை சிஆர்பிஎப் உறுதி செய்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர், காஷ்மீரின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் கிடைத்த மகத்தான வெற்றியே நமது படைகளின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது.
காஷ்மீர், நக்சல் நடமாட்ட பகுதி, வடகிழக்கு மாநிலங்கள் என 3 இடங்களில் தான் நீங்கள்(சிஆர்பிஎப் வீரர்கள்) பணியில் ஈடுபட்டுள்ளீர்கள். அடுத்த சில ஆண்டுகளில் இந்த 3 பகுதிகளிலும் அமைதி நிலவும் என்பதை உறுதியாக கூறுகிறேன். அதன்பிறகு அங்கு சிஆர்பிஎப் வீரர்களின் கண்காணிப்பு தேவைப்படாது. இது உறுதி. இது நிறைவேறினால் அதற்கான முழு பெருமையும் சிஆர்பிஎப் படையையே சேரும்.
மேலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்து மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். இதனால் காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்து அமைதி திரும்புகிறது. இதில் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம். இது நமது பாதுகாப்பு படையினரின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்கும் பணியை சிஆர்பிஎப் படைப்பிரிவு நீண்ட காலமாக செய்து வருகிறது. இக்கட்டான சூழலில் மக்களை மீீட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.