தர்மசாலா:இரண்டு ஆண்டுகளுக்குப் பின், திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா, நேற்று தர்மசாலாவில் நடந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
கடந்த 1959ல், நம் அண்டை நாடான சீனாவில், அரசுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டதை தொடர்ந்து, திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா, நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.அன்று முதல், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் அவர் வசித்து வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டு களாக, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது வெளியில் வராமல் இருந்த தலாய் லாமா, நேற்று தர்மசாலாவில் உள்ள சுக்லாகாங் புத்தர் கோவிலில் நடந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதில், ஆயிரக்கணக்கான திபெத்தியர்களும், துறவிகளும் பங்கேற்றனர்.அந்த நிகழ்ச்சியில் பேசிய தலாய் லாமா கூறியதாவது:வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக டில்லிக்கு செல்ல இருந்தேன். இப்போது உடல்நலத்துடன் இருப்பதால், அங்கு செல்லவில்லை. எனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டருடன், குத்துச்சண்டை விளையாடும் அளவுக்கு வலிமையாக இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement