இலங்கை கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக கல்வித் துறையைச் சார்ந்த நிர்வாகிகள், உத்தியோகத்தர்கள், கல்வித்திட்டங்களை வடிவமைப்போர் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோருக்காக சென்னையில் உள்ள தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்விக்கழகத்தினால்(என்ஐடிடிடிஆர்) ஐந்து ஆளுமை விருத்தி பயிற்சி நெறிகள், இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ்(ITEC) இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த கற்கை நெறிகள் ஊடாக கிட்டத்தட்ட இலங்கையைச் சேர்ந்த 200 அதிகாரிகள் பயன்பெறுவார்கள் என்று நம்பப்படுகின்றது.
2. பாடத்திட்ட வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு, பாடத்திட்ட உருவாக்குனர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான பயிற்றுவிப்பு உட்பொருள் மேம்பாடு, பாடசாலை அதிபர்களுக்கான தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ மேம்பாடு, இணய தொழில்நுட்பமூடாக கல்விசார் செயலிகளை வடிவமைத்தல், வினைத்திறன்மிக்க நிர்வாகத்துக்காக தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் மற்றும் நிர்வாகத்துறையினருக்காக தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட பயிற்சி நெறிகளை சென்னையில் உள்ள தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்விக்கழகம் நடத்திவருகிறது.
3. 2022 மார்ச் 14ஆம் திகதி நடைபெற்றிருந்த ஆரம்ப நிகழ்வில் உரை நிகழ்த்திய பிரதி உயர் ஸ்தானிகர் ஸ்ரீ வினோத் கே ஜேக்கப் அவர்கள், இலங்கையிலுள்ள நண்பர்களுடன் ஆளுமைவிருத்தி பயிற்சிகள் மற்றும் ஏனைய ஒத்துழைப்புக்களையும் அனுபங்களையும் பகிர்ந்து கொள்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியிருந்தார். கொவிட் பெருநோய் காரணமாக இலங்கை அதிகாரிகள் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டமையால் 2020 ஏப்ரலில் இணைய ரீதியான பயிற்சிகளை முன்னெடுப்பதற்கு இந்தியா ஆரம்பித்திருந்ததுடன் மறுசீரமைக்கப்பட்ட இ-ITEC பயிற்சிகள் மூலமாக இலங்கையைச் சேர்ந்த 600க்கும் அதிகமான அதிகாரிகள் சுகாதாரம், ஆயுள்வேதம், ஆட்சியமைப்பு, பெற்றோலியம் மற்றும் ஹைட்ரோகார்பன், புதுப்பிக்கத்தக்க சக்தித்துறை, நகர முகாமைத்துவம், பெண்கள் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணைய பாதுகாப்பு, பொலிஸ் துறை, வங்கி மற்றும் முகாமைத்துவம், கல்வி, பொறியியலும் தொழில்நுட்பமும், முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவம் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்ட இணைய ரீதியான கற்கைநெறிகள் மூலமாக நன்மை அடைந்திருந்தனர்.
4. இதேவேளை இங்கு உரை நிகழ்த்திய இலங்கை தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன அவர்கள் இருபத்தியோராம் நூற்றாண்டில் கல்வி தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் அதேவேளை இலங்கையில் கல்வி மறுசீரமைப்பு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை குறித்து வலியுறுத்தியிருந்தார்.
5. இலங்கை உட்பட நட்பு நாடுகளுடன் சென்னையில் உள்ள தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்விக்கழகம் (என்ஐடிடிடிஆர்) ஒத்துழைப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி உட்பட கல்வித்துறையில் கொண்டிருக்கும் மிக முக்கியமான வகிபாகம் தொடர்பாக அந்நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி உஷா நடேசன் அவர்கள் இங்கு தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார். இதேவேளை இலங்கை கல்வி அமைச்சின் மனித வளத்துறை பணிப்பாளர் திருமதி ஜயனி திலகரட்ன, நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் கலாநிதி ஜி.ஏ.ரதி, என்ஐடிடிடிஆர் நிறுவனத்தின் ITEC இணைப்பாளர் பேராசிரியர் கலாநிதி ஜி குழந்தைவேல் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பிரிவின் கவுன்சிலரும் உயர் ஸ்தானிகராலய தலைமை அதிகாரியுமான கலாநிதி சுசில் குமார் ஆகியோரும் இந்த ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.
6. உத்தியோகத்தர்களின் ஆளுமை திறனை மேம்படுத்துவதனை இலக்காகக் கொண்டு முழுமையாக நிதி அனுசரணை வழங்கப்பட்ட ITEC பயிற்சி நெறிகளில் ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு இந்தியாவால் 402 ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் பல்வேறு பாட விதானங்களிலும் பட்டப்படிப்பு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி கற்கைநெறிகளை தொடர்வதற்காக வருடாந்தம் இலங்கையைச் சேர்ந்த 710 பேருக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
17 மார்ச் 2022