சென்னை:
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வேளாண்துறையின் மூலம் கொடுக்கப்படுகிற மானியங்கள், செயல்படுத்தப்படுகிற திட்டங்கள், அமைக்கப்படுகிற கட்டமைப்புகள், அளிக்கப்படுகிற தொழில்நுட்பம், பகரப்படுகிற பயிற்சி போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து உழவர்களை கைப்பிடித்து முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்கிற இந்த முயற்சியை ஊரக வளர்ச்சித் துறையும், வேளாண் துறையும் இணைந்து மேற்கொள்ளும். எண்ணற்ற உலர் களங்களும், கான்கிரீட் களங்களும், நெல் கிடங்குகளும், பண்ணைக் குட்டைகளும், கசிவுநீர்க் குட்டைகளும், சிறுஏரிகள் பாசன மேம்பாடும் சேரும்போது ஏற்படும் தாக்கம் மகத்தானதாக இருக்கும்.
இத்திட்டத்தின் கீழ் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு இலவசமாகத் தென்னங்கன்றுகள் வழங்கப்படுவதோடு எலுமிச்சை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற தோட்டக்கலைச் செடிகள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டு ஊரகப்பகுதிகளில் ஊட்டச்சத்து பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
வரும் 2022-23-ம் ஆண்டில் இத்திட்டம், 3204 கிராமப் பஞ்சாயத்துக்களில் 300 கோடி ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.