உக்ரைன் ரஷ்யா இடையே தொடரும் கடுமையான போரில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான உக்ரைனிய குடிமக்கள் தங்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக அடைக்கலம் தேடி சென்றுள்ளனர். இந்த நிலையில், ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்களை தாங்களே காலில் சுட்டுக்கொள்வதாக `Daily Star’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “உக்ரைனில் நடக்கும் போரிலிருந்து தப்பிக்க ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்கள் காலில் தாங்களே சுட்டுக்கொள்ளும் அளவுக்கு புதினின் ராணுவத்தில் மன உறுதி மிகவும் குறைந்துள்ளது.
மூன்று வாரமாக நடைபெறும் மிருகத்தனமான போரினால் ரஷ்ய ராணுவ வீரர்கள் சோர்வடைந்து வருவதாகத் தோன்றுகிறது. இதுவரை 7,000 ரஷ்யர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், தாமாக முன்வந்து தங்கள் ராணுவ பதவிகளை விட்டு வெளியேறுபவருக்கு கடுமையான தண்டனைகள் காத்திருக்கின்றன. எனவே, விரைவாக இல்லம் திரும்ப தங்களை தாங்களே காயப்படுத்திக்கொள்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.
பெலாரஸ்ய ஊடகமான நெக்ஸ்டாவின் கூற்றுப்படி, “புதினின் ராணுவ வீரர்கள் உக்ரைனிய தோட்டாக்களை தேடுகிறார்கள். அப்போது தான் காலில் சுட்டுக் கொள்ள முடியும்.
உக்ரைன் போர்க்களத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஆசையில் புதினை மறுப்பவர்கள் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டிவரும். ரஷ்ய வீரர் ஒருவர் இது தொடர்பாக கூறும் போது,”14 நாட்களாக துப்பாக்கிச் சூடு நடத்துகிறோம்.
எங்களுக்கான உணவைத் திருடுகிறோம், வீடுகளுக்குள் புகுந்து, பொதுமக்களைக் கொல்கிறோம். எங்கும் சடலங்களாக உள்ளன” எனக் வேதனையை வெளிப்படுத்தினார்.
மேலும், ரஷ்ய ராணுவ வீரர்களில் ஒருவரான கல்கின் செர்ஜி அலெக்ஸீவிச், “எனது அணிக்காக, இந்த நிலங்களின் மீதான எங்கள் ஆக்கிரமிப்பிற்காக உக்ரைனில் உள்ள ஒவ்வொரு குடிமகனிடமும், முதியோர்களிமும், பெண்களிமும், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எங்கள் துரோகப் படையெடுப்பிற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தது குறிப்பிடதக்கது.