ரஷ்யா – உக்ரைன் போரில் கர்நாடக மாநிலம், ஹவேரி பகுதியைச் சேர்ந்த 21 வயதான நவீன் என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். நவீனின் தந்தை சேகரப்பா ஞானகவுடா, தன் மகனின் உடலை வீட்டுக்குக் கொண்டுவர உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகிய இருவரையும் கேட்டுக்கொண்டார். “ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப்பட்ட பிறகு, அவர் உடல் இந்தியா கொண்டுவரப்படும்” எனக் கர்நாடக முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
இந்தநிலையில், உக்ரைனில் உயிரிழந்த நவீனின் உடல் வருகிற 21-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் பெங்களூருவுக்கு வந்தடையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக நவீனின் தந்தை சங்கரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “என் மகன் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியுமா என எங்களுக்கு தெரியாமல் இருந்தோம். ஆனால், மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால், அவரை கடைசியாக ஒருமுறை பார்க்கலாம். இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம். நவீனின் உடலுக்கு வீட்டில் காரியம் செய்து முடித்த பின்னர், உடலை மருத்துவம் படிக்கக் கூடிய மாணவ மாணவிகளுக்காக தேவநகரியில் உள்ள எஸ்.எஸ். மருத்துவமனைக்குத் தானமாகக் கொடுக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்றார்.