பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா, உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டை ஆக்கிரமித்ததிலிருந்து அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு மக்களை ஒன்று திரட்டிவருகிறார். உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றும் நோக்கில், ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கின்றன. மேலும் அமெரிக்கா, ரஷ்யா அதிபர் புதினை ”போர்க்குற்றவாளி” என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
இந்தநிலையில், இரு தரப்பினரும் பல வாரங்களாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இன்னும் சமரச நிலையை எட்டப்படவில்லை. இது குறித்து உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளதாவது, “உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமைதி பேச்சுக்கான நேரம் வந்துவிட்டது. இல்லையென்றால், ரஷ்யா பல தலைமுறைகள் நீடிக்கும் இழப்புகளை எதிர்கொள்ள நேரிடும். உக்ரைன் எப்போதும் அமைதிக்கான பேச்சுவார்த்தையைத் தான் விரும்புகிறது” கூறினார்.