லிவ்: உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளின் நினைவாக லிவ் நகரில் காலியான ஸ்ட்ரோலர்களை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தனது அண்டை நாடான உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதியில் இருந்து குண்டு வீசித் தாக்கி வருகிறது. இதில் உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ், மற்றும் தெற்கு உக்ரைனில் இருக்கும் துறைமுக நகரமான மரியுபோல் கடுமையான தாக்குதலுக்கு உள்ளகாகி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனின் மேற்கு பகுதியில் இருக்கும் லிவ் நகரத்திற்கு போர்முனையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இதற்கிடையில், லிவ் நகரத்தின் மத்தியில் இருக்கும் மைதானத்தில், போரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, போரில் கொல்லப்பட்ட குழந்தைகளை நினைவுகூரும் வகையில், பச்சிளம் குழந்தைகளை வைத்து இழுத்துச் செல்லும் ‘ஸ்ட்ரோலர்’ வண்டிகளை காலியாக நிறுத்தி குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய உக்ரைனிய அதிகாரி ஒருவர், “ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்ட ஒவ்வொரு குழந்தைகளின் நினைவாக, 109 காலியான ஸ்ட்ரோலர்கள் மைதானத்தின் முன்னால் வரிசையாக நிறுத்தி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது” என்றார்.
அந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட உக்ரைனிய வம்சாவளியைச் சேர்ந்த கனடா குடியுரிமை பெற்றுள்ள சுராவ்கா நடலியா டான்கோவிட் என்பவர், “உங்களுடை குழந்தைகள் சிறுவர்களாக இருந்தபோது, இதுபோன்ற வண்டிகளில் இருந்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த வண்டிகளில் இனி சில குழந்தைகளால் உட்காரவே முடியாது. ஏனெனில் அவர்கள் இன்று உயிருடன் இல்லை. இதை உங்கள் சொந்தக் குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள், உங்கள் குழந்தைகள் மீதான உணர்வுகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இனி நான் காலியான வண்டிகளைப் பார்க்க விரும்பவில்லை” என ரஷ்யத் தாய்மார்களுக்கு தெரிவிப்பது போல பேசினார்.
உக்ரைன் மீதான தாக்குதலில் பொதுமக்கள் யாரும் குறிவைக்கப்படவில்லை, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என ரஷ்ய தரப்பு தொடர்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.