உக்ரைன் மீது புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல்

மாஸ்கோ,
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ந்தேதி அந்நாடு மீது ரஷியா படையெடுத்தது.  உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என ரஷிய அதிபர் புதின் கூறினார்.  உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து 24வது நாளாக நீடித்து வருகிறது.  இந்த போரில், குடிமக்களில் 600 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், தனது புதிய கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை முதன்முறையாக வெள்ளிக்கிழமை உக்ரைனில் நாட்டின் மேற்கில் உள்ள ஆயுதங்கள் சேமிப்பு கிடங்கை அழிக்க பயன்படுத்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் புதின் தனது தேசிய உரையில் வெளியிட்ட புதிய ஆயுதங்களின் வரிசையில் கின்சல் ஏவுகணையும் ஒன்றாகும்.
இது ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறக்கும் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்கக்கூடிய கின்சல் (டாகர்) ஏவுகணை ஆகும். 
இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ஹைப்பர்சோனிக் ஏரோ பாலிஸ்டிக் ஏவுகணைகள் கொண்ட கின்சல் ஏவியேஷன் ஏவுகணை அமைப்பு, இவானோ-பிரான்கிவ்ஸ்க் பகுதியில் உள்ள டெலியாட்டின் கிராமத்தில் ஏவுகணைகள் மற்றும் விமான வெடிமருந்துகள் அடங்கிய பெரிய நிலத்தடி கிடங்கை அழித்தது” என்று கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.