கீவ்: உக்ரைனின் லிவிவ் நகரில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தின் மீது ரஷ்ய ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
உக்ரைனின் மேற்குப் பகுதி பாதுகாப்பானவை என்று கருதப்பட்டது. தற்போது மேற்கு பகுதிகளை குறிவைத்தும் ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்திவருகிறது. உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள லிவிவ் நகரில்விமானப் படைத் தளம் அமைந்துள்ளது. அங்கு போர் விமானங்கள் பழுது பார்க்கப்படுகின்றன. அந்த தளத்தை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் விமானம் பழுது பார்க்கும் தளம் தகர்க்கப்பட்டது.
இதுகுறித்து லிவிவ் நகர மேயர் ஆண்ட்ரே கூறும்போது, “ரஷ்ய தாக்குதலில் போர் விமானங்களை பழுது பார்க்கும் தளம் கடுமையாக சேதமடைந்துள்ளது. எனினும் உயிரிழப்பு ஏற்படவில்லை. அருகில் உள்ள விமான நிலையம் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பியுள்ளது. கிழக்கு பகுதி மக்கள் லிவிவ் நகரில் தஞ்சமடைந்திருந்தனர். ஆனால் இங்கும் தாக்குதல் தீவிரமாகி உள்ளது” என்று தெரிவித்தார்.
தலைநகர் கீவ் மீது ரஷ்ய ராணுவம் நேற்று தீவிர தாக்குதல்களை நடத்தியது. எனினும் தலைநகரை இதுவரை கைப்பற்ற முடியவில்லை. உக்ரைனின் இஸ்யும் நகரின் பாதி பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் நேற்று ரஷ்ய அதிபர்விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து ரஷ்ய அதிபர்மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக மட்டுமே மேற்கத்திய நாடுகளும் ஊடகங்களும் குற்றம் சாட்டுகின்றன. உக்ரைன் ராணுவம், டிபிஆர், எல்பிஆர் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது போர்க்குற்றம் கிடையாதா?
அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் அரசுக்கு விருப்பம் இல்லை. தற்போதைய உக்ரைன்அரசு அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுகிறது. இந்த கருத்துகளை ஜெர்மனி பிரதமரிடம் ரஷ்ய அதிபர் புதின் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் நேற்று கூறும்போது, “உக்ரைன் அதிபர் ஜெலன்கியும் ரஷ்ய அதிபர் புதினும் நேரடியாக சந்தித்துப் பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனினும் உக்ரைன் தரப்பின் செயல்பாட்டை பொறுத்தே இரு தலைவர்களின் சந்திப்பு முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ் கூறும்போது, “உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்க அரசு 300 உயிரி ஆய்வகங்களை நடத்தி வருகிறது. இதில்உக்ரைனும் ஒன்று. இதற்கானஆதாரங்களை கண்டுபிடித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.